மங்கள மாதிரி எவரும் பெரும்பான்மை கட்சிகளில் இன்றில்லை!!
மங்கள சமரவீர, முதலில் 1988களில் தென்னிலங்கையில் இடம்பெற்ற சிங்கள இளைஞர்களை கடத்தி சென்று கொல்லும் மனித உரிமை மீறல்களை எதிர்த்தார். பின்னர், 2006 முதல் 2012 வரை எமது மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான மனித உரிமை மீறல்களையும் எதிர்த்த காரணத்தின் காரணமாகவே அவர் அன்றைய அரசில் இருந்து விலக்கப்பட்டார். சமீப காலத்தில் இந்நாட்டு முஸ்லிம் மக்களுக்கு எதிராக செய்யப்பட்ட, பலாத்கார ஜனாசா எரிப்பு உள்ளிட்ட இனவாத முன்னெடுப்புகளுக்கு எதிராகவும் செயற்பட்டார். மனித உரிமை மீறல்களில் சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற வேறுபாடு காணாதவர் மங்கள..!
இந்த பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கட்சிகளிலேயே இப்படி யார் இன்று இருக்கிறார்கள்? ஆளும் தரப்பு பக்கமும் பார்க்கிறேன். எதிர்தரப்பு பக்கமும் பார்க்கிறேன். தலையை திருப்பி, திருப்பி பார்க்கிறேன். யாரும் இல்லையே? என மறைந்த அமரர் மங்கள சமரவீர மீதான அனுதாப பிரேரணை மீது பாராளுன்றத்தில் சிங்கள மொழியில் உரையாற்றிய தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது, மங்கள சமரவீர பிறந்ததும், இறந்ததும் தனது காலத்துக்கு முன்னர் ஆகும். அவரிடம் நான் பல பாடங்களை படித்துள்ளேன். அந்த பாடங்கள் எனக்கு மட்டுமல்ல, முழு நாட்டுக்கும் உரித்தானவை. அவற்றை இங்கே கூறி அவருக்கு என் அஞ்சலிகளை தெரிவிக்க விரும்புகிறேன்.
முதலில் ஒன்றை சொல்ல வேண்டும். அவர் 1988களில் தென்னிலங்கையில் இடம்பெற்ற சிங்கள இளைஞர்களை கடத்தி சென்று கொல்லும் மனித உரிமை மீறல்களை எதிர்த்தார். அன்று அவருடன் நிமல்கா பெர்னாண்டோ போன்றோர் அன்னையர் முன்னணியை அமைத்தார்கள். அன்று அவருடன் இருந்த வேறு சில நபர்களின் பெயர்களை நான் இங்கே சொல்ல விரும்பவில்லை. ஏனெனில் அன்று சிங்கள இளைஞர்களை கடத்தப்பட்டு கொல்லப்பட்டதை எதிர்த்தவர்கள், பின்னாளில் எமது மக்கள் கொல்லப்பட, கடத்தப்பட காரணங்களாக அமைந்தார்கள்.
ஆனால், மங்கள அப்படி இருக்கவில்லை. 2006 முதல் 2012 வரை எமது மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான மனித உரிமை மீறல்களையும் எதிர்த்த காரணத்தின் காரணமாகவே அவர் அன்றைய அரசில் இருந்து விலக்கப்பட்டார். 2007ம் வருடம் இதே மாதிரி, ஆளும்தரப்பு பக்கமிருந்து இந்த எதிர்தரப்புக்கு வந்து அமர்ந்தார். இன்று நான் இருக்கும் இந்த ஆசனத்துக்கு அடுத்த ஆசனத்திலேயே அவர் அன்று வந்து அமர்ந்தார்.
அதன் பின் எங்களுடன் சேர்ந்து அன்று நாம் நடத்திய வெள்ளை வேன் கடத்தல் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டார். நிமல்கா பெர்னாண்டோ, பிரியாணி குணரத்ன, சிறிதுங்க ஜெயசூரிய, விக்கிரமபாகு கருணாதரத்ன, நடராஜா ரவிராஜ் ஆகியோருடன் சேர்ந்து எங்கள் அரசு எதிர்ப்பு கூட்டங்களில் கலந்து கொண்டார்.
அது மட்டுமல்ல, சமீப காலத்தில் இந்நாட்டு முஸ்லிம் மக்களுக்கு எதிராக செய்யப்பட்ட இனவாத முன்னெடுப்புகளுக்கு எதிராகவும் செயற்பட்டார். பலாத்காரமாக ஜனாசாக்களை எரித்திடும் அரசின் செயன்முறைக்கு எதிராக எங்களுடன் சேர்ந்து குரல் எழுப்பினார்.
இந்த பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கட்சிகளிலேயே இப்படி யார் இன்று இருக்கிறார்கள்? ஆளும் தரப்பு பக்கமும் பார்க்கிறேன். எதிர்தரப்பு பக்கமும் பார்க்கிறேன். யாரும் இல்லையே?
இந்நாடு சிங்கள பெளத்த நாடு அல்ல என்று சொன்னார். அதாவது சிங்களம், பெளத்தம் மட்டும் என்ற கொள்கையை அவர் எதிர்த்தார். இது சிங்கள, தமிழ், முஸ்லிம் நாடு. இது பெளத்த, இந்து, இஸ்லாம், கத்தோலிக்க நாடு. இதுவே அவரது கொள்கை. இதுவே எனதும் கொள்கை. இதைதான் நானும், அவரும் கலந்துரையாடுவோம்.
அதிகார பகிர்வு என்றால், சிங்கள அதிகாரங்களை தமிழருக்கு கொடுப்பது என்பது அல்ல. கொழும்பில் குவிந்து கிடக்கும் அதிகாரங்களை பிரித்து எடுத்து, மாகாணங்களுக்கு, மாவட்டங்களுக்கு, ஊர்களுக்கு அனுப்புவதுதான் அதிகார பகிர்வு என்ற விடயம் என அவர் புரிந்துக்கொண்டு இருந்தார். கொழும்பில் உள்ள ஒரு விஷேச வகுப்பு எந்த அரசு வந்தாலும் அதிகாரங்களை பிடித்துக்கொள்கிறது. ஆகவே அந்த அதிகாரங்களை பிரித்து எடுத்து மகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பார். இதுவே அவரது கொள்கை. இதுவே எனதும் கொள்கை.
கடைசியாக மதம் என்பது அபின் என்ற கார்ள் மார்க்சின் கருத்தை அவர் ஆதரித்தார். மதம் என்பது அரசு என்ற நிறுவனத்தில் இருந்து பிரிக்கப்பட வேண்டும். மதம் என்பது மனிதர்களின் தனிப்பட்ட விடயம். அதை அரசு கொள்கைகளை தீர்மானிக்க பயன்படுத்த கூடாது என்பது அவரது கொள்கை. இதுவே எனதும் கொள்கை. இதைதான் நானும், அவரும் கலந்துரையாடுவோம்.
தமிழ் மக்களின் உரிமைக்களுக்காக அவர் குரல் எழுப்பினார். அவர் சாகவில்லை. அவர் எங்கள் மனங்களில் உயிர் வாழ்கிறார். அவருக்கு எங்கள் அஞ்சலிகள். அவரது சகோதரி ஜெயந்தி சமரவீர உட்படஅவரது குடும்பத்தவர்களுக்கு எங்கள் அனுதாபங்கள்.