;
Athirady Tamil News

தமிழக மீனவர்கள் 12 பேர் கைது…மிகப்பெரிய போராட்டத்திற்கு தயாராகும் மீனவர்கள்!!

0

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 11 மீனவர்களையும் அவர் சென்ற இரண்டு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து இரணைதீவு கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் நேற்று காலை சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்றது. ஆனால் கடந்த வாரம் தொடர்ந்து இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம், கடற்படையின் கைது நடவடிக்கையால் பெரும்பாலான மீனவ தொழிலாளர்கள் மீன்பிடி தொழிலுக்காக மங்களூர் சென்றுவிட்டனர்.

இதனால் மீன்பிடிக்க செல்ல போதுமான அளவு மீன்பிடித் தொழிலாளர்கள் இல்லாததால் குறைந்த அளவிலான படகுகள் மட்டுமே நேற்று மாலை மீன் பிடிக்க கடலுக்குச் சென்றது.

மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவுக்கும் தனுஸ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தை சேர்ந்த இரண்டு விசைப்படகுகளையும் அதிலிருந்த நெப்போலியம், ஜேம்ஸ், ராபின், முனிஸ்வரன் உள்ளிட்ட 12 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து இரணைதீவு கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் அனைவரும் கிளிநொச்சி மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு பின் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இன்று மாலை சிறையில் அடைக்கப்படுவார்கள் என கிளிநொச்சி மீன் வளத்துறை அதிகாரிகள் தெவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை தனுஸ்கோடி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீன் பிடிக்க விடாமல் தடுத்து விரட்டியடித்ததுடன், நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களின் மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசியுள்ளனர். இதனால் மீன் பிடிக்க சென்ற படகு ஒன்றுக்கு சுமார் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கரை திரும்பிய மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மூன்று விசைப்படகுகளையும் அதிலிருந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப்போராட்டம், ரயில் மறியல் போராட்டம் நடத்திய நிலையில் மீண்டும் ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம் ராமேஸ்வரம் மீன்பிடி கிராமங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி முதல் தொடர்ந்து தமிழக மீன்பிடி படகுகளையும் தமிழக மீனவர்களையும் கைது செய்து வரும் இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்த ராமேஸ்வரம் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.