விமானிகளும் தொழிற்சங்க நடவடிக்கை !!
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் விமானிகள் மன்றம் ‘நேரத்துக்கு மட்டும் வேலை’ தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
தமது கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வை வழங்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிர்வாகம் தவறிவிட்டதாகவும் அதனால் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட நேரிட்டதாகவும் மன்றத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அதற்கமைய, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விமானிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள விமானக் கடமைகளை அவர்களின் விமான அட்டவணைக்கு அமைய மட்டுமே செய்வார்கள் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், அங்கிகரிக்கப்பட்ட வருடாந்த விடுமுறை மற்றும் பொது விடுமுறை நாட்களில் விமானிகள் கடமைகளைச் செய்யமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்களை ஒழுங்காக இயக்குவதற்கு போதுமான விமானிகளை நியமிக்கவில்லை என்றும் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
எனவே, விமானிகள் பற்றாக்குறையை நிரப்புவதற்காக வருடாந்த விடுமுறை மற்றும் பிற விடுமுறை நாட்களில் கூட எந்தவித தயக்கமும் இல்லாமல் இதுவரை கடமைக்கு சமுகமளித்துள்ளனர்.
தற்போது அதிகரித்துள்ள பயணிகளின் வருகையால் விமான நிறுவனம் இலாபம் ஈட்டி வரும் நிலையில், விமானிகளின் கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வை வழங்காதமையை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிர்வாகம் நியாயப்படுத்த முடியாது என்றும் அவர் கூறினார்.
விமானிகளின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்காத வரை தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என சிரேஷ்ட பேச்சாளர் மீண்டும் வலியுறுத்தினார்.