’79 இலட்சமாக வாக்குகள் அதிகரிக்கும்’ !!
அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்துக்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர, ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பெற்ற 6.9 மில்லியன் வாக்குகள், அடுத்த தேர்தலில் 7.9 மில்லியனாக அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.
எம்பிலிப்பிட்டியவில் நேற்று (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும் வெற்றி பெறுவதற்கு தமது கட்சி தயாராக இருப்பதாக நம்பிக்கை தெரிவித்த அவர், 2018ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் எதிர்க்கட்சியாக இருந்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிகொண்ட பெரும்பான்மையை நினைவு கூர்ந்தார்.
பொதுமக்களின் சுமையை குறைக்கும் வகையில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையை குறைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்றும் உறுதியளித்தார்.
ஊழியர் சேமலாப நிதி மேலதிக கட்டணம் சட்டமூலத்தில் சேர்க்கப்பட்டுள்ள பாதகமான சரத்துகளை திருத்துவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார்.
ஊழியர் சேமலாப நிதி மாத்திரமின்றி, பல வணிகங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களும் புதிய வரிக்கு உட்படுத்தப்படும் என்றார்.
மேலதிக வரியால் எந்தவோர் அரச துறை ஊழியரோ அல்லது ஓய்வூதியதாரரோ பாதிக்கப்பட மாட்டார்கள் என்று உறுதியளித்த அவர், அரச சேவைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்த வரி விதிக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
வரி செலுத்த வேண்டிய செல்வந்தர்களை எதிர்க்கட்சி பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் குற்றஞ்சுமத்தினார்.