கச்சதீவு செல்லும் பக்தர்கள் மூன்று தடுப்பூசிகளையும் செலுத்தியிருத்தல் அவசியம்!!
எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள கச்சதீவு திருவிழாவில் பங்குகொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை 500 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு செல்வோர் மூன்று தடுப்பூசிகளையும் அவசியம் செலுத்தியிருக்க வேண்டும் என யாழ். அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
கச்சதீவு திருவிழா ஏற்பாடுகள் தொடர்பில் இன்று(14) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கச்சதீவு தேவாலய உற்சவம் எதிர்வரும் மார்ச் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, கொரோனா சுகாதார நடைமுறைகளை கருத்தில்கொண்டு உள்ளூர் பக்தர்கள் 500 பேர் கலந்து கொள்ளலாம் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும், இந்திய பக்தர்களும் கலந்து கொள்வதற்கு அனுமதி கோரப்பட்டிருந்தது. அந்த கோரிக்கை உரிய மட்டத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.
கலாசார அமைச்சுடன் தொடர்பு கொண்டபோது நாம் ஏற்கனவே தீர்மானித்ததன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கும்படி எமக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், இந்திய பக்தர்கள் பற்றி எந்தவிதமான இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை.
500 பக்தர்களுடன் உற்சவத்தை நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் பூஸ்டர் டோஸ் உட்பட கொரோனா தடுப்பூசி மூன்றும் செலுத்தியிருக்க வேண்டும். மேலும், தடுப்பூசி அட்டையையும் தம்வசம் வைத்திருக்க வேண்டும். தமது பெயர் விபரம், செல்ல உள்ள படகு இலக்கம் உட்பட பதிவு செய்து தெளிவாக விண்ணப்பிக்கும்போது அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதனை அந்த அந்த பங்கிற்குரிய குருவானவருடன் கலந்துரையாடி எடுக்க வேண்டும். அது பற்றிய அறிவிப்பு பேராயர் ஊடாக மேற்கொள்ளப்படும்.
உற்சவம் தவிர வியாபார சேவைகள், இதர செயற்பாடுகள் போன்றன தடை செய்யப்பட்டுள்ளன. மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் சுகாதார நடைமுறையுடன் இறுக்கமான முறையில் பேணி கண்காணிப்பு நடவடிக்கையுடன் மேற்படி கச்சதீவு திருவிழா உற்சவம் நடைபெறவுள்ளது என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”