;
Athirady Tamil News

கல்லூண்டாய் வெளி குடியிருப்பு மக்கள் வீதி மறியல் போராட்டம்!! (படங்கள்)

0

யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, கல்லூண்டாய் வெளி குடியிருப்பு மக்கள் இன்று காலை வீதி மறியல் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

நீண்ட நாட்களாக தீர்வு வழங்கப்படாத தமது குடிநீர் பிரச்சினைக்கு உடன் தீர்வு வழங்க வேண்டும் என குறிப்பிட்டு யாழ்ப்பாணம் – பொன்னாலை – பருத்தித்துறை வீதியின் கல்லூண்டாய் பகுதி வீதியினை மறித்து வீதியின் குறுக்கே பொதுமக்களும் மாணவர்களும் அமர்ந்திருந்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதனால் குறித்த வீதியின் போக்குவரத்து ஒரு சில மணித்தியாலங்கள் பாதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் போராட்ட இடத்திற்கு விரைந்த மானிப்பாய் பொலிஸார் வீதியை வழிமறித்து போராட்டத்தை முன்னெடுத்த மக்களை அகற்றி போக்குவரத்தினை முன்னெடுத்திருந்தனர்.

தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்த மக்களுடன் போச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பொலிஸார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்து தருவதாக வாக்குறுதி வழங்கியதை அடுத்து அதிகாரிகள் போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகைதந்திருந்தனர்.

இதன்போது யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ( காணி ) எஸ்.முரளிதரன், யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா, மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் அ.ஜெபநேசன், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் யசோதா உதயகுமார் உள்ளிட்டவர்கள் வருகைதந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் கலந்துரையாடியிருந்தனர்.

குறித்த கலந்துரையாடலில் பிரச்சினைக்கு உரிய தீர்வினை உடனடியாக பெற்று தருவதாக தெரிவித்தோடு குடியிருப்பு பகுதிக்கும் நேரடியாக சென்று பார்வையிட்டதனை அடுத்து போராட்டம் நிறைவு பெற்றது.

அத்தோடு கல்லூண்டாய் வெளி குடியிருப்பு மக்களின் குடிநீர் தேவைக்கு உடனடியாக தீர்வினை வழங்குவதற்காக யாழ் மாவட்ட இராணுவத்தின் 512வது படைப்பிரிவால் குடிநீர் விநியோகம் ஒவ்வொரு வீடுகளிற்கும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.