உண்ணாவிரத போராட்டம் நடத்த மீனவர்கள் முடிவு!!
இந்தியாவில் ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழக கடல் பகுதியில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக தாக்கப்படுவதும், படகுகளுடன் சிறை பிடிக்கப்படும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 23 மீனவர்களையும் 5 படகுகளையும் இலங்கை கடற்படை அடுத்தடுத்து சிறைபிடித்துள்ளது.
இந்த நிலையில் தங்கச்சிமடம் சூசையப்பர் பட்டினம் ஆலய வளாகத்தில் நேற்று மீனவ சமுதாய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மீனவ சமுதாய மக்கள் திரளா னோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் மீன்பிடிக்க செல்லும் ராமேசுவரம் உள்ளிட்ட தமிழக மீனவர்களை தொடர்ச்சியாக கைது செய்து வரும் இலங்கை கடற் படையின் நட வடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவும், தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசை கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், வருகிற 21 ஆம் திகதி முதல் தங்கச்சிமடத்தில் அனைத்து மீனவ சமுதாய மக்கள் மற்றும் அனைத்து மீனவர்களும் ஒன்று சேர்ந்து தொடர் உண்ணா விரத போராட்டம் நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது