’மக்களையே பாதுகாக்க வேண்டும்’ !!
தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்பையும் மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவே ஆட்சிக்கு வந்ததாகவும் ஆனால்,அரசாங்கத்திடம் இருந்து மக்களைப் பாதுகாப்பதே இன்று நடந்திருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு நன்கொடை வழங்கும் நிகழ்வு நேற்று (15) இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
அங்கு மேலும் தெரிவித்த அவர், தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு அவ்வப்போது புதிய பரிசுகளை வழங்கி வருகிறது. உரம் வழங்கும் நடைமுறையை இல்லாமலாக்கிய பரிசு, வெடிக்கும் எரிவாயு சிலிண்டர்கள் போன்ற பரிசுகளின் வரிசையில் அடுத்த சில மாதங்களுக்கு மின்வெட்டை ஏற்படுத்துவதே புதிய பரிசாகும் என்று தெரிவித்தார்.
சுபிட்சத்தின் தொலைநோக்கு என்ற பார்வைக்குப் பதிலாக இருளின் தொலைநோக்கு பார்வையையே அரசாங்கம் செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
கருத்து சுதந்திரம்,பேச்சு உரிமை, அரசியல் சுதந்திரம் போன்ற அனைத்து உரிமைகளையும் அரசாங்கம் மீறிச் செயல்படுவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், 24 மணி நேரமும் மக்களின் உரிமைகளை மீறும் அரசாங்கமே இன்று ஆட்சியில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இருநூறு மில்லியனுக்கும் மேல் வரி வருவாய் ஈட்டும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு 25 சதவீதம் மிகைக் கட்டண அறவீட்டிற்கு ஊழியர் நம்பிக்கை நிதியம்,ஊழியர் சேமலாப நிதியம் உள்ளிட்ட 11 நிதியங்கள் உள்ளடக்கப்படவில்லை என நிதியமைச்சர் கூற வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளார் என சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தினாலயே நிதியங்களில் கை வைக்கும் முயற்சியில் அரசாங்கம் ஒரு அடி பின்வாங்கியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.