ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில் கருத்தரங்கு!! (படங்கள், வீடியோ)
ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில் “ஈழத்தமிழர் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வும் தேசிய, பிராந்திய, சர்வதேச நிலவரங்களும் எனும் தொனிப்பொருளிலான கருத்தரங்கு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்ற கருத்தரங்கில் தமிழீழ விடுதலை இயக்கம் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனும், தமிழ் மக்கள் விடுதலைக் கழகம் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனும், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரனும் , தமிழ்த் தேசியக் கட்சி சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தவும் பங்கேற்று உரையாற்றியிருந்தனர்.
அத்துடன் யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத்தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி.கே.ரி.கணேசலிங்கம், அரசியல் ஆய்வாளரான ஏ.யதீந்திரா மற்றும் அரசியல் ஆய்வாளர் நிலாந்தனும் பங்கேற்று உரையாற்றினர்.
எனினும் தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா இந்நிகழ்வில் பங்கேற்கவில்லை என்பதுடன் அக்கட்சியின் பிரதிநிதிகள் யாரும் குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
அதேவேளை இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கையெழுத்துப் போராட்டத்தில் மாவை சேனாதிராஜா கலந்து கொண்ட நிலையில் கருத்தரங்கில் கலந்து கொள்ளாதமை அங்கிருந்தவர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது.
ஆறு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து பாரதப் பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டல்களை வழங்குவதற்காக இந்த மக்கள் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”