;
Athirady Tamil News

தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது!!

0

கொவிட் தொற்றுநோயின் அழிவுகரமான விளைவுகளிலிருந்து நாடு மீண்டு வரும் நிலையில் தேசத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருப்பதாக தாம் நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தாhர்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (15) பிற்பகல் நடைபெற்ற ஒக்ஸ்போர்ட் வர்த்தகக் கல்லூரியின் (ஒக்ஸ்போர்ட் கொலேஜ் ஒஃப் பிஸ்னஸ்) வருடாந்த பட்டமளிப்பு விழா – 2022 இல் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் வர்த்தக முகாமைத்துவம் மற்றும் வர்த்தக நிர்வாகப் பிரிவு பட்டதாரிகள் மற்றும் முதுகலைப் பட்டதாரிகள் 507 பேர் கௌரவிக்கப்பட்டது.

தமது கற்கைநெறிகளில் சிறப்புத் திறன்களை வெளிப்படுத்திய எஸ்.எல்.ஜி.விஜேரத்ன, எஸ்.எல்.எம்.எம்.மெல்வானி, ஓ.ஜி.விதுரங்க சேனாநாயக்க ஆகியோர் பிரதமரிடமிருந்து சிறப்பு விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,

உங்கள் வாழ்க்கையின் இந்த முக்கியமான தருணத்தில் எனக்கும் பங்கேற்க கிடைத்தமையை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக பல பட்டதாரிகளால் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை. வாழ்க்கையின் மிக முக்கியமான மற்றும் பொன்னான தருணங்களைக் கொண்டாடுவதற்கான வாய்ப்பு கொவிட் தொற்றுநோயால் இழக்கப்பட்டது. எனவே உங்களைப் போன்ற பட்டதாரிகள் தங்கள் பேராசிரியர்கள், பல்கலைக்கழக சக ஊழியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் தங்கள் வெற்றியைக் கொண்டாட முடியவில்லை. அந்தவகையில், இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள கிடைத்தமை உங்களது அதிர்ஷ்டமாகும்.

தொற்றுநோயிலிருந்து இலங்கை மீண்டு வருகின்றமைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இன்று உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்புமுனையாகும். ஒக்ஸ்போர்ட் கொலேஜ் ஒஃப் பிஸ்னஸ்-இல் இருந்து உலகத் தரம் வாய்ந்த பட்டம் பெற்றுள்ளீர்கள், உலகில் எங்கும் போட்டியிட உங்களை அனுமதிக்கும் மேம்பட்ட கல்வி உங்களிடம் உள்ளது. இந்தக் கல்வியோடு உங்களுக்கும் ஒரு பாரிய பொறுப்பு உள்ளது. உலகையே மாற்றும் சக்தி வாய்ந்த ஆயுதம் கல்விதான் என்று உலகப் புகழ்பெற்ற தலைவர் நெல்சன் மண்டேலா கூறியுள்ளார்.

அந்தவகையில், உங்கள் கல்வியைப் பயன்படுத்தி, சிறந்த நாட்டிற்கும், சிறந்த உலகிற்கும் பங்களிக்க வேண்டிய தருணம் இது. உங்கள் தொழில் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நீங்கள் செல்லும்போது, உலகம் முழுவதும் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்தி தொழில் முன்னேற்றத்தை நோக்கி பயணிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எவ்வாறாயினும், அந்த அறிவு, நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தை இலங்கைக்கு கொண்டுவந்து எமது சமூகத்திற்கு பெறுமதியான பங்களிப்பை வழங்குவீர்கள் என நான் நம்புகிறேன். நீங்கள் அறிந்தவகையில், கல்வியறிவு அதிகம் உள்ள நாடு என்பதில் இலங்கையர்களாகிய நாம் அனைவரும் பெருமை கொள்ளலாம். நீங்கள் இப்போது படித்த மற்றும் திறமையான பணியாளர்களின் ஒரு பகுதியாக மாற தயாராக உள்ளீர்கள்.

கொவிட் தொற்றுநோயின் அழிவுகரமான விளைவுகளிலிருந்து நம் நாடு மீண்டு வரும்போது, தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது என்று நான் நம்புகிறேன். நீங்கள் பெற்றுள்ள இந்த உலகத் தரம் வாய்ந்த கல்வியானது, தொற்றுநோய்க்குப் பிந்தைய நாட்டின் பொருளாதார மீட்சிக்கு இலங்கை திரும்ப உதவுவதில் ஒரு முக்கிய பங்கை வகிக்க முடியும். வர்த்தகத் துறையில் பட்டம் பெற்ற பட்டதாரிகளின் பாரம்பரிய வாழ்க்கைப் பாதை பெரும்பாலும் ஒரு நிர்வாகி அல்லது முகாமையாளராக வேலை பெறுவதாகும்.

இருப்பினும், அந்த பாரம்பரிய வாழ்க்கை பாதைக்கு அப்பால் சிந்திக்க வேண்டிய நேரம் இது என்று நான் நம்புகிறேன். எமது பொருளாதார மீட்சியை இலக்காகக் கொண்டு உலகளாவிய ரீதியில் போட்டியிடுவதற்கு, தொற்றுநோய்க்கு பிந்தைய காலக்கட்டத்தில் பொருளாதார மீட்சியை வழிநடத்தக்கூடிய தொழில்முனைவோர் இலங்கைக்கு தேவை. எனவே உங்கள் புதுமையான யோசனைகளை புதிய முயற்சிகளாக மாற்ற வேண்டும். அதன்போது ஏனைய இலங்கையர்களுக்கு உங்களால் வேலைவாய்ப்பு உள்ளிட்ட குறிப்பிடத்தக்க பொருளாதார செயற்பாடுகளை உருவாக்கி அவற்றை பாரிய வர்த்தக நிறுவனங்களாக விரிவுபடுத்தலாம். அரசாங்கம் என்ற வகையில், இளைஞர் யுவதிகளின் புதிய தொழில் முயற்சிகளுக்காக பல வாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம். இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஏனைய இலங்கையர்களுக்கு சிறந்த எதிர்காலத்தையும் வாய்ப்புகளையும் உருவாக்க உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். அதன்போது எமது நாட்டின் பொருளாதார மீட்சிக்கு பங்களிப்பு செய்து ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோராக நீங்கள் உங்கள் கல்வியின் மூலம் பயனடைந்து நிலையான வருமானத்தை உருவாக்க முடியும்.

பட்டப்படிப்பினை நிறைவு செய்யும்வரை இந்த வெற்றியை அடைய உதவியவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதற்கும் நீங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முதலாவதாகவும், பிரதானமாகவும் உங்கள் வெற்றிக்காக உங்கள் பெற்றோர் செய்த தியாகங்களை நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் பெற்றோர்கள் இன்று உங்கள் வெற்றியின் அசைக்க முடியாத வீரர்கள். உங்கள் இரண்டாவது பெற்றோர் உங்கள் ஆசிரியர்கள். அவர்கள் உங்களுக்கு அறிவை ஆயுதமாக வழங்கி, நல்ல குடிமக்களாக மாற வழிகாட்டியுள்ளனர். இன்று நீங்கள் பட்டம் பெறும்போது, உங்கள் வாழ்க்கையின் ஆசிரியர்கள் உங்களுக்கு வழங்கிய அறிவு மற்றும் வழிகாட்டுதலுக்கு நாம் அனைவரும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் எந்த தொழிலை தெரிவுசெய்தாலும், அதில் பெரும் அர்ப்பணிப்புடன் ஈடுபடுங்கள். கற்றல் ஒரு வாழ்நாள் செயல்முறை. அதனால் கற்றலை ஒருபோதும் நிறுத்த வேண்டாம். இறுதியாக நீங்கள் அனைவரும் பெற்ற வெற்றிக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் அமைய பிரார்த்திக்கிறேன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.