;
Athirady Tamil News

விநியோக குறைவால் எரிபொருள் தட்டுப்பாடு !!

0

நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான விநியோகம் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளதால், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, கூட்டுத்தாபனத்தில் தேசிய சேவையாளர் சங்கத்தின் செயலாளர் ஆனந்த பாலித, நேற்று (16) தெரிவித்தார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர், இந்திய எண்ணெய் நிறுவனத்திடமிருந்து இருந்து 40,000 மெற்றிக் தொன் எரிபொருளை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் நேற்றுமுன்தினம் (15) கையளித்தார்.

நாட்டின் நாளாந்த எரிபொருள் தேவை 6,000 மெற்றிக் தொன் என்றும் பெறப்பட்ட 40,000 மெற்றிக் தொன் எரிபொருள் எட்டு நாட்களுக்கு மட்டுமே போதுமானது என்றும் பாலித தெரிவித்தார்.

எட்டு நாட்களுக்குள் அடுத்த எரிபொருள் தொகுதி வரவில்லை என்றால், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்று குறிப்பிட்ட அவர், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லாமல் சீராக விநியோகிக்கப்படுவதை உறுதிசெய்ய அடுத்த மூன்று நாட்களுக்குள் அடுத்த தொகுதி வந்து சேர வேண்டும் என்றார்.

இதன் காரணமாகவே நாட்டில் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனவும் சில நிரப்பு நிலையங்கள் எரிபொருளைக் கோரியபோதும் விநியோகத்தைப் பெற இரண்டு முதல் மூன்று வாரங்கள் காத்திருக்கின்றன.

ஒவ்வொரு நிரப்பு நிலையத்திலிருந்தும் 3 கிலோ மீற்றர் தூரத்தில் கூட்டுத்தாபனத்தின் 1,350 நிரப்பு நிலையங்கள் நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ளன.

எனினும், நாட்டில் போதிய எரிபொருள் கைவசம் இருப்பதாகவும், ஆனால் அது மின்சார உற்பத்திக்காக விநியோகிக்கப்பட்டால் போக்குவரத்து துறைக்கு போதுமானதாக இருக்காது என்றும் அமைச்சர் கம்மன்பில சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேவேளை, போதுமானளவு எரிபொருள் கையிருப்பிலுள்ளதாகவும் மக்கள் வரிசையில் நின்று எரிபொருளை கொள்வனவு செய்ய வேண்டியதில்லை என கூட்டுத்தாபனத்தின் தலைவர், சட்டத்தரணி சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.