;
Athirady Tamil News

வவுனியா வைத்தியசாலையில் சிசு மரணமடைந்தமை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் கோரிக்கைக்கு அமைவாக சுகாதார அமைச்சு விளக்கம் கோரியது! (படங்கள்)

0

வவுனியா வைத்தியசாலையில் சிசு ஒன்று மரணமடைந்தமை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் கோரிக்கைக்கு அமைவாக சுகாதார அமைச்சு விளக்கம் கோரியுள்ளது.

சுகாதார அமைச்சின் மருத்துவ சேவைகள் மேலதிக செயலாளர் வைத்தியர் சுனில் டி அல்விஸ் அவர்களால் வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு அனுப்பி வைத்த கடிதத்திலேயே இவ்வாறு விளக்கம் கோரப்பட்டுள்ளது.

வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு வவுனியா வைத்தியசாலையின் 7 ஆம் விடுதியில் 2020 டிசம்பர் 14 ஆம் திகதி பிறந்த குழந்தை ஒன்று மரணமடைந்திருந்தது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையின் கவனக்குறைவினாலேயே தனது குழந்தை மரணமடைந்ததாக ஜனாதிபதி செயலகம், சுகாதார அமைச்சு மற்றும் ஆளுனர் அலுவலகம் என்பவற்றுக்கு முறைப்பாடு செய்துள்ளதுடன், சட்ட நடவடிக்கையையும் முன்னெடுத்து வருகின்றார்.

குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி செயலகத்தின் மூத்த உதவிச் செயலாளர் (பொது செய்திகள்) திருமதி.மல்காந்தி ராஜபக்ஷவிடமிருந்து சுகாதார அமைச்சுக்கு விளக்கம் கோரியும், விசாரணை அறிக்கை கோரியும் கடிதம் அனுபப்பட்டுள்ளது. இதனையடுத்து சுகாதார அமைச்சினால் வவுனியா வைத்தியசாலை பணிப்பாளரிடம் விளக்கம் கோரப்பட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் மருத்துச சேவைகள் மேலதிக செயலாளர் வைத்தியர் சுனில் டி அல்விஸ் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மருத்துவ அலட்சியத்தால் தனது குழந்தை இறந்தது என கிடைத்த முறைப்பாடு குறித்து விசாரணை நடத்துமாறு கோருவதுடன், இந்த விடயத்தில் கவனம் செலுத்தி பிரச்சனை தொடர்பான அறிக்கையை திருமதி மல்காந்தி ராஜபக்ஷவிற்கு பிரதியுடன் எனக்கு அனுப்பவும்.

மேலும், இந்த விடயங்களின் முன்னேற்றத்தை சுகாதார அமைச்சு வாராந்தம் ஜனாதிபதி செயலக அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டியிருப்பதால், ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமை அல்லது அதற்கு முன்னர் ஒவ்வொரு விடயத்தின் முன்னேற்றத்தையும் மேலதிக செயலாளரின் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். இதனை அதிக முன்னுரிமையாக கருதுங்கள் எனவும் வவுனியா வைத்தியசாலை பணிப்பாளருக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வவுனியா வைத்தியசாலையில் கடந்த ஆண்டு அதிக சிசு மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் செய்திகள் வெளியாகியுளள நிலையில் இவ் விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.