விவசாயத்தை கைவிடும் பரிதாப நிலை !!
மாத்தளை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் விவசாய நடவடிக்கைகளை கைவிடப்போவதாக விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
வன விலங்குகள் தொடர்ச்சியாக தமது பயிர்களுக்கு சேதம் ஏற்படுத்திவருவதன் காரணமாக இவ்வாறு மேலதிக பயிர்ச் செய்கையில் இருந்து விலகுவதாக விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இதன்படி நாவுல, லக்கல, வில்கமுவ, தம்புள்ளை, கலேவெல ஆகிய பிரதேசங்களில் காட்டு யானைகள் அச்சுறுத்தி வருவதாகவும், குறித்த பிரதேசங்களில் நெல் உள்ளிட்ட ஏனைய பயிர்கள் பயிரிடப்பட்டாலும் அறுவடை செய்ய முடியாத நிலையே காணப்படுவதாக அவர்கள் விசனம் வெளியிடுகின்றனர்.
அத்தோடு மாத்தளை உட்பட உக்குவெல, யடவத்தை, ரத்தோட்டை உள்ளிட்ட பல கிராமங்கள் குரங்குகள் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ளன.
மாத்தளையின் சில பகுதிகளிலுள்ள விவசாயிகள் காட்டுப்பன்றிகளிடம் இருந்து பயிர்களை பாதுகாப்பது கடினமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
கிராமங்களில் உள்ள பயிர்களை தாக்கும் பூச்சிகளை அகற்றி வஸ்கமுவ போன்ற பூங்காவிற்கு விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், கிளிகள், மயில்கள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட விலங்குகள் பயிர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருவதாகவும், தற்போது விவசாயிகள் பயிர்கள் அழிவடைந்த நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதுகுறித்து சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவிக்கப்பட்ட போதும் உரிய கவனம் செலுத்தாதது வருத்தமளிப்பதாக விவசாய அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.