;
Athirady Tamil News

‘இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்டம்’ மூலம் கண்டறியப்பட்ட தகவல்கள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டின் மார்ச் மாத அறிக்கையில் உள்ளடக்கப்படும் – லிவியா கொசென்ஸா!!

0

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்தின் ஊடாக வழங்கப்பட்ட பொறுப்புக்கூறல் பற்றிய ஆணையை நடைமுறைப்படுத்தும் பணிகள் கடந்த 2021 ஆம் ஆண்டு மேமாதத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் மனித உரிமைகள் அதிகாரியான லிவியா கொசென்ஸா, அதற்கென உருவாக்கப்பட்ட ‘இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்டம்’ சிரியா மற்றும் மியன்மார் ஆகிய நாடுகள் தொடர்பில் உருவாக்கப்பட்ட பொறிமுறையிலிருந்து வேறுபடுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அச்செயற்திட்டத்தின் ஊடாகக் கண்டறியப்பட்ட தகவல்கள் எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையில் உள்ளடக்கப்படும் என்றும் இலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கான ஏனைய வழிமுறைகளை உள்ளடக்கிய விரிவான அறிக்கைய எதிர்வரும் செம்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

‘இலங்கையில் தண்டனையிலிருந்து பாதுகாப்புப்பெறும் போக்கிற்கு எதிரான போராட்டத்தை வலுவூட்டுதல்’ என்ற தலைப்பில் தென்னாபிரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகளுக்கான நிலையம் மற்றும் இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் ஆகிய இரு அமைப்புக்களுடனும் இணைந்து சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தினால் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை இலங்கை நேரப்படி பிற்பகல் 7.30 மணிக்கு நிகழ்நிலை ஊடாகக் கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அக்கலந்துரையாடலில் பங்கேற்றுக்கொண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்தின் பிரகாரம் இலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதை முன்னிறுத்தி ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46ஃ1 தீர்மானத்தின் ஊடாக வழங்கப்பட்ட பொறுப்புக்கூறல் பற்றிய ஆணையை நடைமுறைப்படுத்தும் பணிகள் கடந்த ஆண்டு (2021) மேமாதத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டன.

அதன்படி ‘இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்டம்’ என்ற இணையப்பக்கம் உருவாக்கப்பட்டது. மேலும் இப்பணியை முன்னெடுத்துச்செல்வதற்கென சர்வதேச குற்றவியல் மற்றும் மனித உரிமைகள் சட்டம், பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகள், பாதிக்கப்பட்ட தரப்பினரின் உரிமைகள் மற்றும் தகவல் முகாமைத்துவம் உள்ளடங்கலாக பல்வேறு முக்கிய விவகாரங்களில் தேர்ச்சிபெற்ற ஊழியர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டிருப்பதுடன் இன்னும் பல ஊழியர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இந்தப் பணிகளில் ஈடுபடும் குழுவினர் ஜெனீவாவைத் தளமாகக்கொண்டியங்குவதுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அதிகாரத்தின்கீழ் செயற்படுவர்.

அதேவேளை இந்தப் பொறிமுறையானது சிரியா தொடர்பில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் உருவாக்கப்பட்ட பொறிமுறை, மியன்மார் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் உருவாக்கப்பட்ட பொறிமுறை ஆகியவற்றிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றது என்பது குறித்து விளக்கமளிக்க விரும்புகின்றேன்.

மேற்குறிப்பிட்ட இரு பொறிமுறைகளும் முழுமையாக சுயாதீனமானவை என்பதுடன் அவை ஐக்கிய நாடுகள் சபையின் சிரேஷ்ட அதிகாரிகளால் தலைமைதாங்கப்படுகின்றன. அத்தோடு அவற்றுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் ஊழியர்களும் வளங்களும் மிகவும் விரிவானவையாகும். இவை உண்மையைக் கண்டவதற்காக மனித உரிமைகள் பேரவையினால் உருவாக்கப்படும் பொறிமுறையிலிருந்து வேறுபட்டவையாகும்.

இருப்பினும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46/1 தீர்மானத்தின் ஊடாக வழங்கப்பட்ட ஆணையின் பிரகாரம் உருவாக்கப்பட்டுள்ள ‘இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்டமானது’ பொறுப்புக்கூறல் விவகாரத்துடன் தொடர்புடைய தகவல்களை ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையில் உள்ளடக்குவதற்கென வழங்கும்.

அதன்படி ஏற்கனவே வழங்கப்பட்ட தகவல்கள் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கூட்டத்தொடரில் எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் முன்வைக்கப்படவுள்ள ஆரம்ப அறிக்கையில் உள்வாங்கப்படும். அதேவேளை இலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கான ஏனைய வழிமுறைகளை உள்ளடக்கிய விரிவான அறிக்கை எதிர்வரும் செம்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படும்.

மேலும் சர்வதேச சட்டங்களுக்கு முரணான வகையில் இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் மீறல்கள் குறித்து ஆராய்வதற்கென உருவாக்கப்பட்டுள்ள இச்செயற்திட்டத்தின் ஊடாக அத்தகைய சம்பவங்கள் தொடர்பான ஆதாரங்கள் திரட்டப்பட்டு, அவைகுறித்து விரிவாக ஆராயப்பட்டு, அவை பாதுகாப்பான முறையில் களஞ்சியப்படுத்தப்படும்.

அதேவேளை இவ்விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் ஊடாக ஏற்கனவே சேகரிக்கப்பட்ட தகவல்கள், ‘குற்றவியல் நீதி’ என்ற கோணத்தில் மீண்டும் ஆராய்விற்கு உட்படுத்தப்படும். மேலும் எதிர்காலத்தில் பொறுப்புக்கூறல் பொறிமுறையை வலுப்படுத்துவதற்குரிய செயற்திட்டம் உருவாக்கப்படுவதுடன் அது பாதிக்கப்பட்ட தரப்பினரை மையப்படுத்தியதாக அமையும் என்று குறிப்பிட்டார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.