பாதிக்கப்பட்ட தரப்பினர் பொறுப்புக்கூறலைக் கோரவில்லை என்று ராஜபக்ஷ அரசாங்கம் கூறிவந்த கருத்து முற்றிலும் பொய்யானது – பாப்லோ டி கிரீஃப்!!
இலங்கையில் பாதிக்கப்பட்ட தரப்பினர் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுமாறு கோரவில்லை என்றும் மாறாக பொருளாதார ரீதியான அபிவிருத்தியே அவர்களது எதிர்பார்ப்பாகக் காணப்படுகின்றது என்றும் முன்னைய ராஜபக்ஷ அரசாங்கம் கூறிவந்தது.
அந்தக் கருத்தில் எவ்வித உண்மையும் இல்லை என்பதுடன் பாதிக்கப்பட்ட தரப்பினரின் நீதிக்கான கோரிக்கை மிகவும் வலுவாகக் கருத்திற்கொள்ளப்படவேண்டும் என்று உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள்நிகழாமை ஆகியவற்றை வலுப்படுத்துதல் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் விசேட அறிக்கையாளர் பாப்லோ டி கிரீஃப் வலியுறுத்தியுள்ளார்.
அதுமாத்திரமன்றி கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதியும் பிரதமரும் நிலைமாறுகாலநீதி தொடர்பில் உரியவாறானதும் தெளிவானதுமான பொறிமுறையொன்றை உருவாக்கத் தவறிவிட்டதாகச் சுட்டிக்காட்டியுள்ள பாப்லோ டி கிரீஃப், ‘விரிவான ஓரின முறைமையின்’ ஊடாக நீதியையோ பாதுகாப்பையோ அடைந்துகொள்ளமுடியாது என்பதைப் பெரும்பான்மையினர் புரிந்துகொள்ளவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
‘இலங்கையில் தண்டனையிலிருந்து பாதுகாப்புப்பெறும் போக்கிற்கு எதிரான போராட்டத்தை வலுவூட்டுதல்’ என்ற தலைப்பில் தென்னாபிரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகளுக்கான நிலையம் மற்றும் இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் ஆகிய இரு அமைப்புக்களுடனும் இணைந்து சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தினால் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை இலங்கை நேரப்படி பிற்பகல் 7.30 மணிக்கு நிகழ்நிலை ஊடாகக் கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அக்கலந்துரையாடலில் பங்கேற்றுக்கொண்டு ‘நிலைமாறுகாலநீதி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொறிமுறை’ தொடர்பில் கருத்துவெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அதில் அவர் மேலும் கூறியதாவது,
ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் என்ற வகையில் இலங்கையின் கடந்த அரசாங்கத்துடன் பணியாற்றியமை குறித்த எனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். கடந்த அரசாங்கத்தில் நான் முகங்கொடுத்த குறிப்பிடத்தக்க சிக்கல் எதுவென்றால் அப்போதைய ஜனாதிபதியும் பிரதமரும் நிலைமாறுகாலநீதி தொடர்பில் உரியவாறானதும் தெளிவானதுமான ஓர் பொறிமுறையை உருவாக்கவில்லை. அவர்கள் அதனை முழுமையாக ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ இல்லை.
கடந்த காலங்களைப் பொறுத்தமட்டில் இலங்கையின் பெரும்பாலான அரசாங்கங்கள் சர்வதேசத்தின் பொதுநிலைப்பாட்டைத் திருப்திப்படுத்துவதில் கவனம் செலுத்தினார்களே தவிர, அவர்களுக்குரிய கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் அவதானம் செலுத்தவில்லை.
இவ்விடயத்தில் இன்றளவிலே பதிவாகும் விடயங்கள் மேலும் மோசமடைந்துள்ளன என்று கூறவேண்டியிருப்பதையிட்டு நான் கவலையடைகின்றேன்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் மார்ச்மாதக் கூட்டத்தொடரை இலக்காக்கொண்டு, அதில் தமக்கு ஆதரவை வழங்குமாறுகோரி இலங்கையின் இராஜதந்திரிகள் ஏனைய சர்வதேச நாடுகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இருப்பினும் பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் அதன் வளங்களை முழுமையாகப் பயன்படுத்தமுடியும். ஆனால் கடந்த காலங்களில் இலங்கையுடன் இணைந்து பணியாற்றியபோது நான் அதனை அவதானிக்கவில்லை.
குறிப்பாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் என்பன ஸ்தாபிக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகமும் உருவாக்கப்பட்டது.
இருப்பினும் அது உரியவாறான பொறிமுறையொன்றைக் கொண்டிருக்கவில்லை. அதுமாத்திரமன்றி அதன் பொறிமுறையைப் பயன்படுத்தி பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான மிகச்சொற்பளவான பணிகளை மாத்திரமே செய்யமுடியும்.
இவ்வாறானதொரு பின்னணியில் இச்செயன்முறையில் எத்தகைய பங்களிப்பினை வழங்கமுடியும் என்பது குறித்து இலங்கையில் இயங்கும் சிவில் சமூக அமைப்புக்களுக்கு மாத்திரமன்றி இதனுடன் தொடர்புடைய சர்வதேச தரப்பினருக்கும் சில பரிந்துரைகளை முன்வைக்கவிரும்புகின்றேன்.
இதுவிடயத்தில் இலங்கையை சரியான பாதையில் நகரச்செய்வதற்கான வலுவான அழுத்தங்களைப் பிரயோகிப்பதில் ஐக்கிய நாடுகள் சபையினால் மிகையான பங்களிப்பை வழங்கமுடியும். இதில் வெவ்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் ஐ.நா தலைமைக்காரியாலயம் எவ்வாறு செயற்பட்டது என்பதை விளக்குவது கடினம் என்பதோடு, அது பெருமளவிற்குப் பயன்தராது.
மறுபுறம் இலங்கையின் சிவில் சமூகங்கள் மிகவும் விரிவானவையாகக் காணப்படுகின்ற போதிலும், அவை ஓர் வலையமைப்பாக உருவாகுதற்குத் தவறியிருக்கின்றன. இவ்வாறானதொரு பின்னணியில் ‘விரிவான ஓரின முறைமையின்’ ஊடாக (ஒரு இனம் மாத்திரம் பரந்தளவில் காணப்படுதல்) நீதியையோ அல்லது பாதுகாப்பையோ அடைந்துகொள்ளமுடியாது என்பதைப் பெரும்பான்மையினத்தவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
பாதிக்கப்பட்ட தரப்பினர் பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படவேண்டும் என்று கோரவில்லை. மாறாக பொருளாதார ரீதியிலான அபிவிருத்தியே அவர்களது எதிர்பார்ப்பாகவும் விருப்பமாகவும் இருக்கின்றது என்று முன்னைய ராஜபக்ஷ அரசாங்கம் கூறியது.
ஆனால் அது முற்றிலும் பொய்யானது என்பதுடன் தற்போதும் எதிர்காலத்திலும்கூட அது சாத்தியப்படாது. எனவே பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்கான கோரிக்கை மிகவும் வலுவாகக் கருத்திற்கொள்ளப்படவேண்டியது அவசியமாகும் என்று வலியுறுத்தினார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”