’பெற்றோல் விலை மேலும் அதிகரிக்கும்’ !!
ஐ.ஓ.சி நிறுவனத்தில் விற்பனை செய்யப்படும் எரிபொருளின் விலையை விட, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை விரைவில் அதிகரிக்கப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
அம்பலாந்தோட்டயில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், கடந்த காலங்களில் பணத்தைக் கொடுத்து எரிபொருளை பெற்றுகொண்டார்கள். இப்போது கடனுக்கே எரிபொருள் பெற்றுக்கொள்ளப்படுகிறது. வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவும், கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவும் இந்தியாவிலிருந்து எரிபொருளை ஏற்றிவந்த கப்பலைப் பொறுப்பேற்க செல்கிறார்கள். இது நகைப்புக்குரியது என்றார்.
ஐ.ஓ.சி நிறுவனத்தில் பெற்றோலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால், இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான எரிபொருள் நிலையங்களிலேயே மக்கள் பெற்றோலை கொள்வனவு செய்கிறார்கள் என்றார்.
இதனால் இரண்டு விதமான பிரச்சினைகள் அரசாங்கத்துக்கு ஏற்படப்போகிறது. ஒன்று, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நட்டத்தில் இயங்கி வருமாக இருந்தால் அதிகமான பெற்றோலை விற்பனை செய்வதானூடாக மேலும் அந்நிறுவனம் நட்டமடையும். இரண்டாவது, கடனுக்கு அரசாங்கம் கொள்வனவு செய்யும் எரிபொருளும் விரைவாக தீர்ந்துவிடும் என்றார்.
ஐ.ஓ.சி நிறுவனத்தில் விற்பனை செய்யப்படும் எரிபொருளின் விலையை விட, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் விரைவிலேயே விலையை அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்றார்.