ரஷ்யா உக்ரைன் விவகாரம் – பதற்றத்திற்கு நடுவில் போலந்து சென்றார் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்…!!
உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து வரும் நிலையில், அங்கு போர் பதற்றம் நிலவி வருகிறது.
உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டம் எதுவுமில்லை என ரஷ்யா தொடர்ந்து கூறி வந்தாலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இதனை நம்ப மறுக்கின்றன. அதேசமயம் உக்ரைனுக்கு நேட்டோ படைகள் ஆதரவு தெரிவித்து வருவதால், அங்கு தற்போது போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, பெல்ஜியம், போலந்து மற்றும் லித்துவேனியா ஆகிய 3 நாடுகளுக்கு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது 3 நாடுகளின் ஜனாதிபதிகள் மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரிகளை சந்தித்துப் பேச உள்ளார்.
இந்நிலையில், உக்ரைன் நாட்டுடன் தனது எல்லையைப் பகிர்ந்து கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றான போலந்துக்கு, அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் விமானம் மூலம் சென்றடைந்தார்.
பெல்ஜியம் சுற்றுப்பயணத்தை முடித்து தற்போது லாயிட் ஆஸ்டின் போலந்து நாட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு போலந்து நாட்டின் ஜனாதிபதி அண்ட்ரெஜ் டூடா மற்றூம் பாதுகாப்புத்துறை மந்திரி மரியுஸ் பிளாசாக் ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.