;
Athirady Tamil News

வீடு உடைத்து பெருமளவு நகைகளை கொள்ளை; மூவர் கைது!!

0

வீடு உடைத்து பெருமளவு நகைகளை கொள்ளையடித்து கெரோயின் வாங்கிய பிரதான சந்தேகநபர் உட்பட மூவரை நகைகளுடன் கைது செய்தனர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்புபிரிவினர்

கடந்த மாதம் 28ம் திகதி மாலை 3 மணி தொடக்கம் 4 மணிக்கு இடைப்பட்ட நேரம் யாழ் பிறவுண் வீதியில் அமைந்துள்ள கோவில் குருக்கள் ஒருவரின் வீட்டினுள் குறித்த திருட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளது. குருக்கள் வழமைபோல குறித்த நேரத்தில் கோவிலுக்கு செல்வதை அவதானித்த பிரதான சந்தேகநபர் வீட்டின் முன் கதவுகள் பூட்டப்பட்டு இருந்தமையால் பின் பக்கமாக சென்று பின்பக்க கதவை உடைத்து வீட்டின் சாமி அறைக்குள் சென்று அங்கிருந்த 24 பவுண் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளார்.

இதில் தாலி கொடி, சங்கில் , கைச்சங்கிலி, காப்பு போன்ற நகைகள் திருடப்பட்டன. இது தொடர்பில் யாழ் பொலிஸ் நிலையத்தில் குருக்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்புபிரிவின் பொறுப்பதிகாரி நிகால் பிரான்சிஸ் தலைமையிலான குழுவினர் தமது விசாரணைகளை மேற்கொண்டனர். இதனடிப்படையில் பெறப்பட்ட தகவல்கள் மற்றும் விசாரணைகளின் அடிப்படையில் பிரதான சந்தேகநபர் யாழ் கஸ்தூரியார் வீதியில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் திருடப்பட்ட நகைகளை குறித்த திருட்டுக்கு உடந்தையாக இருந்த நபர் ஒருவர் மூலமாக வங்கியில் பணிபுரியும் ஒருவரின் உதவியுடன் வேலனையில் உள்ள வங்கி ஒன்றில் அடகு வைத்ததாகவும் அடகுவைத்ததன் மூலம் பெறப்பட்ட பணத்தை கொண்டு கெரோயின் கொள்வனவு செய்ததாகவும் அதித கெரோயின் பயன்பாட்டினால் கெரோயினை உட்கொள்வதற்கு பெருமளவு பணம் தேவைப்படுவதால் இப்படியாக திருட்டுக்களில் ஈடுபடுவதாக பொலிஸாரிடம் தெரிவித்தார்.

மேலும் ஒரு நெக்லஸ் மற்றும் காப்பு ஒன்றும் தனியார் அடகு நிறுவனம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளதால் அதனை மீட்கும் முயற்சியினை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். திருடப்பட்ட மிகுதி நகைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டன. மேலும் பிரதான சந்தேகநபர் உட்பட உடந்தையளித்த குற்றச்சாட்டில் சுன்னாகம் பகுதியை சேர்ந்த 28 வயது நபரும் நகைகளை அடகு வைக்க உதவிய வேலனை பகுதியை சேர்ந்த 30 வயதுடைய நபரும் கைது செய்யப்பட்டனர். கெரோயின் பாவனையால் யாழில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதுடன் கெரோயின் பாவனையில் சிக்கும் இளைஞர்கள் தொடர்பில் பெற்றோர் கூடிய கவனம் செலுத்தும் படி பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.