பஞ்சாப் சட்டசபை தேர்தல் – இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது…!!!
117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்துக்கு ஒரே கட்டமாக இன்று சட்டசபை தேர்தல் நடக்கிறது.
பிப்ரவரி 14-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் முதலில் அறிவித்தது. ஆனால் பிப்ரவரி 16-ல் குரு ரவீந்திரதாஸ் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்க பஞ்சாபிலிருந்து வாரணாசிக்கு ஏராளமானோர் செல்வார்கள் என்பதால் தேர்தல் தேதியை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. எனவே, தேர்தல் தேதி பிப்ரவரி 20-ம் தேதிக்கு மாற்றப்பட்டது.
இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, பா.ஜ.க., சிரோமணி அகாலி தளம் என பலமுனை போட்டி நிலவுகிறது.
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்தனர். நேற்று முன்தினம் மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.
இந்நிலையில், பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் 9 பெண்கள் உள்பட 1304 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இதேபோல், 403 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேச மாநிலத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் 3-வது கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. ஹத்ராஸ், மகோபா, ஜான்சி, கான்பூர் நகர் உள்பட 16 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் மொத்தம் 627 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.15 கோடி மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.