பஞ்சாப் சட்டசபை தேர்தல் – வாக்குப்பதிவு தொடங்கியது…!!
117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 23 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறுகிறது.
பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, நவ்ஜோத் சிங் சித்து, கேப்டன் அமரீந்தர் சிங் உள்பட மொத்தம் 1,304 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாலை 6 மணி வரை நடைபெறும் வாக்குப்பதிவில் மொத்தம் 2.14 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். இன்று பதிவாகும் வாக்குகள் மார்ச் 10-ஆம் தேதி எண்ணப்படுகிறது.
வாக்குப் பதிவு மையங்களுக்கு வரும் வாக்காளர்கள் முக கவசம் அணியாமல் இருந்தால் அவர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டு பின்னர் வாக்களிக்க அனுமதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி
வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, காரர் பகுதியில் உள்ள ஸ்ரீ கடல்கர் சாஹிப் குருத்வாராவில் பிரார்த்தனை செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் வெற்றி பெற தாங்கள் அனைத்து முயற்சியையும் செய்துள்ளதாகவும், தேர்தல் முடிவுகள் மக்களின் விருப்பமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.