மணிப்பூரில் வேட்பாளர் தந்தையின் மீது துப்பாக்கி சூடு..!!
மணிப்பூர் மாநிலத்தில் வருகிற 27 மற்றும் அடுத்த மாதம் 5-ந்தேதிகளில் 2 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி பிரசாரம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று ஓட்டுவேட்டையாடி வருகின்றனர்.
ஆண்ட்ரோ தொகுதியில் தேசிய மக்கள் கட்சி சார்பில் சஞ்சோய்சிட் என்பவர் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக தந்தை சம்ஜய்சிங் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமி திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் அவரது தோள்பட்டையில் குண்டு பாய்ந்தது.
உடனடியாக அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்டது யார்? என்பது தெரியவில்லை. வேட்பாளர் சஞ்சோய்சிட் கடந்த மாதம்தான் பா.ஜனதா கட்சியில் இருந்து விலகி தேசிய மக்கள் கட்சியில் சேர்ந்தார்.
இதனால் தேர்தல் முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
தேசிய மக்கள் கட்சியின் தலைவரும் மேகாலயா முதல்- மந்திரியுமான கான்ராட் கேசங்மா ஆஸ்பத்திரிக்கு சென்று துப்பாக்கி சூட்டில் காயமடைந்த சம்ஜய்சிங்கை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் இச்சம்பவத்திற்கு அவர் கண்டனமும் தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகள் மீது மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.