’வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதில் அலட்சியம்’ !!
நோயாளர்களுக்கு ஒமிக்ரோன் வைரஸ் தொற்று ஏற்பட்டால் அவர்களை உடனடியாக வைத்தியசாலைகளுக்கு அழைத்து செல்ல வேண்டும் என தெரிவிக்கும் விசேட வைத்திய நிபுணர் மல்காந்தி கல்ஹேன, அவ்வாறில்லை என்றால் உயிராபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ஒமிக்ரோன் வைரஸ் நாட்டில் வேகமாகப் பரவிவரும் அதேவேளை, இந்த வைரஸ் தொற்றுக்குள்ளாகும் பல்வேறு நோய்களைக் கொண்டவர்களுக்கு, இந்நோய்க்கான அறிகுறிகள் கடுமையாகக் காணப்படுகிறது என்றார்.
இதேவேளை இந்த வைரஸால் ஏற்படும் பாதிப்புகள் குறைவு என்பதால், ஏனைய நோய்களைக் கொண்டவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்படும்போது கூட அவர்களை வைத்தியசாலைகளுக்கு அழைத்து செல்வதில்லை. மாறாக, அந்த நோயாளர்களை வீட்டிலேயே தொடர்ந்து வைத்திருக்கிறார்கள். இது தொடர்பில் பல்வேறு தகவல்கள் தமக்குக் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இது உண்மையில் பாரதூரமான விடயம். பல்வேறு நோய்களைக் கொண்டவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு குறைந்தளவிலான நோய் அறிகுள் தென்பட்டாலும் அவர்களை வீடுகளில் வைத்திருப்பது ஆபத்தானது. இதனால் உயிராபத்துகள் கூட ஏற்படலாம் எனவும் எச்சரித்தார்.