’தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை’ !!
எங்காவது ஒரு கொலை நடந்துள்ளது என்பதை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அறிவிக்க முடியாது என்று தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, கொலைகள் போன்ற சம்பவங்கள் பொதுவாக எந்த நாட்டிலும் நடக்கும் என்று தெரிவித்தார்.
மஹரகம ஜனாதிபதி கல்லூரியில் போர்வீரர் நினைவுச் சின்னத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது வரை தேசிய பாதுகாப்பு தொடர்பில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை என்று உறுதியளித்த அவர், ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பாதுகாப்பு தொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கான தேசிய பாதுகாப்பு சபை கூட்டம் இடம்பெற்றதன் பின்னர், வாரத்துக்கு ஒருமுறை அனைத்து துறை தலைவர்களும் கூடி தேசிய பாதுகாப்பு குறித்து ஆழமான கலந்துரையாடல்களை குறைந்தது அரை நாளுக்கு மேற்கொள்வதாக குறிப்பிட்டார்.
வெடிகுண்டு மிரட்டல் அல்லது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படும் என்ற வதந்திகள் வெளியாகும் போதெல்லாம், தாமாக முன்வந்து தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதாகத் தெரிவித்தார்.
எந்தவொரு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பிலும் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்பதை பொதுமக்களுக்கு உறுதியளிக்கும் பணியை தாம் செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் காலத்திலும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என தெரிவித்த அவர், கடந்த சில நாட்களாக இடம்பெற்ற கொலைகள் மற்றும் ஏனைய சம்பவங்கள் தொடர்பான பல்வேறு செய்திகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கையில்,
ஏதோ ஒரு இடத்தில் நடக்கும் ஒரு கொலையைக் காட்டிலும் தேசிய பாதுகாப்பு என்பது பரந்த அளவிலான விடயம் என்று தெளிவுபடுத்தினார்.
இலங்கையானது, வேறொரு நாட்டிலிருந்து முன்னெடுக்கப்படும் படையெடுப்பு, பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொண்டால் அல்லது கொவிட் நோயினால் உயிரிழப்பவர்கள் இருந்தால் அல்லது நாட்டில் மக்களை பாதிக்கும் இயற்கை அனர்த்தங்கள் இடம்பெற்றால் அதை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று அறிவிக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.
எங்காவது ஒரு கொலை நடந்துள்ளது என்பதை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அறிவிக்க முடியாது என்றும் அரசாங்கம் பாதாள உலக செயற்பாடுகளை மிகக்குறைந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
சிறு சிறு சம்பவங்கள் பொலிஸாரால் கட்டுப்படுத்தப்படுவதாகவும் கொலைகள் போன்ற நிகழ்வுகள் பொதுவாக எந்த நாட்டிலும் நடக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.