ஆணுறையில் மறைத்து எடுத்து வந்த ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்- 2 பேர் கைது…!!!
வளைகுடா நாடுகளில் இருந்து கேரளா வருவோரில் சிலர் தங்கம் கடத்தி வருவதாக சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கொச்சியில் உள்ள விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் வளைகுடா நாடுகளில் இருந்து வந்த விமான பயணிகளும் கண்காணிக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஷார்ஜாவில் இருந்து கேரளாவின் கொச்சி விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் இருந்து இறங்கிய 2 பயணிகளின் நடத்தையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவர்களின் உடமைகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் தங்கம் எதுவும் இல்லை. இருந்தாலும் அவர்கள் மீதான சந்தேகம் நீங்காததால் அவர்கள் அணிந்திருந்த உடைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது இருவரும் சில ஆணுறைகளை ரகசியமாக வைத்திருந்தனர். அவற்றை அதிகாரிகள் வாங்கி பார்த்தபோது அதில் காப்ஸ்யூல் வடிவில் தங்கம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டு பிடித்தனர்.
தங்கம் பதுக்கி வைத்திருந்த இருவரும் கேரளாவின் மலப்புரத்தை சேர்ந்த சித்தார்த் மதுசூதனன் மற்றும் நிதின் உன்னிகிருஷ்ணன் என தெரியவந்தது. இருவரிடமும் 1.9 கிலோ தங்கம் இருந்தது. இதன் சந்தை மதிப்பு ரூ. 1 கோடியாகும்.
கடத்தி வரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை கடத்தி வந்த சித்தார்த் மதுசூதனன் மற்றும் நிதின் உன்னிகிருஷ்ணன் ஆகியோரையும் கைது செய்தனர்.