கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது: சித்தராமையா குற்றச்சாட்டு…!!
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சிவமொக்காவில் பஜ்ரங்தள அமைப்பின் தொண்டர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதை பார்க்கும்போது, கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று தெரிகிறது. இதில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, தூக்கு தண்டனை கிடைக்க செய்ய வேண்டும். கொலையாளிகள் எந்த சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
இந்த சம்பவத்திற்கு மந்திரிகள் ஈசுவரப்பா, அரக ஞானேந்திரா ஆகியோர் தான் பொறுப்பு. போலீஸ் மந்திரி பதவியை அரக ஞானேந்திரா ராஜினாமா செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் வெட்கம் இல்லாதவர்கள், ராஜினாமா செய்ய மாட்டார்கள். காங்கிரஸ் மீது ஈசுவரப்பா குறை கூறுகிறார். இந்த சம்பவத்தில் போலீசார் தீவிரமான விசாரணை நடத்த வேண்டும்.
நான் முதல்-மந்திரியாக இருந்தபோது போலீஸ் மந்திரியாக இருந்த கே.ஜே.ஜார்ஜ் பதவியை ராஜினாமா செய்தார். சட்டசபை விவாதத்தில் பங்கேற்க காங்கிரசுக்கு ஆர்வம் இல்லை என்று மந்திரி ஆர்.அசோக் கூறியுள்ளார். தேசிய கொடிக்கு அவமானம் ஏற்பட்டபோது, காங்கிரசார் அதை கண்டித்து போராட்டம் நடத்துவார்கள் என்பது இந்த அரசுக்கு தெரியும்.
40 சதவீத கமிஷன், பிட்காயின் முறைகேடு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து நாங்கள் பிரச்சினை கிளப்புவோம் என்று பா.ஜனதாவினருக்கு தெரியும். அதனால் ஈசுவரப்பா விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அரசு அமைதியாக உள்ளது. சபை சுமுகமாக நடைபெற வேண்டும் என்று அரசு விரும்பி இருந்தால் ஈசுவரப்பாவை நீக்கி இருப்பார்கள்.
மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அரசுக்கு ஆர்வமில்லை. ஜனதா தளம் (எஸ்) உறுப்பினர்கள் எங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் அதற்கு எங்களது ஆட்சேபனை இல்லை. நாங்கள் எங்களின் கடமையை ஆற்றுகிறோம். அவர்களுக்கு தொந்தரவு கொடுப்பது எங்களின் நோக்கம் இல்லை. தேசிய கொடிக்கு அவமானம் ஏற்படும்போது அதை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க வேண்டுமா?. சபையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஒத்திவைத்தால் நாங்கள் மக்கள் மன்றத்தில் போராடுவோம்.