’கோதுமை மாவால் மந்தபோசணை மேலும் அதிகரிக்கும்’ !!
தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வழங்கும் கோதுமை மாவால், மலையகத்தில் மேலும் மந்தபோசணை அதிகரிக்கும் என தெரிவிக்கும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் எம்.பியுமான வே.இராதாகிருஷ்ணன், ஆயிரம் ரூபாய் விடயத்தில் நொண்டிச்சாக்குக்காகவே கம்பனிகள் நீதிமன்றம் சென்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இறப்பர் மீள்நடுகை மானியச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் நேற்று (22) கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள விவகாரம் தொடர்பில் கம்பனிகள் நீதிமன்றத்துக்கு
சென்றிருப்பதால், எதனையும் எங்களால் செய்ய முடியாதென அரசாங்கம் கூறுகிறது.
பெருந்தோட்டக் கம்பனிகள் நீதிமன்றத்துக்கு சென்றிருப்பது ஒரு நொண்டிச் சாக்கு. இதனை வைத்துகொண்டு காலத்தை இழுத்தடிக்கிறார்கள் என்றார்.
எனவே, இதில் அரசாங்கம் தலையீடுகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியாவசிய பொருள்களின் விலைகளில் அதிகரித்துள்ள நிலையில், தோட்டத் தொழிலாளர்களுக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ள விசனத்துக்குரியது. தொழிலாளர்களை
சமாதானப்படுத்த 15 கிலோ கோதுமை மாவு வழங்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களை மேலும் மந்தபோசணையில் வைத்திருப்பதற்கான நிகழ்ச்சி நிரலே தவிர தொழிலாளர்களின் போசாக்கை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.