IMFக்கு செல்ல தீர்மானிக்கவில்லை !!
சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் அரசாங்கம் திறந்த மனதுடன் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ரமேஷ் பத்திரண, நேற்று முன்தினம் (21) நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பிலும் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வது தொடர்பில் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (22) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், இலங்கையானது, கடந்த 50 வருடங்களில் 29 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை பெற்றுள்ளதாக தெரிவித்த அவர், இதில் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் தான் அதிக தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தை நாடியுள்ளதாகவும் எனவே, இந்த அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை எதிர்க்கவில்லை என்றார்.
எனவே சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தேவையான வெளிப்படைத்தன்மையைப் பெறுவதற்கு அரசாங்கம் தேவையான முடிவுகளை எடுத்துள்ளதாகவும் தெரிவித்த அவர், இன்னும் இரண்டு மாதங்களில் இந்த நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என்றும் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் நாட்டில் சிறந்த நிலை ஏற்படும் என நம்புவதுடன், வெளிநாட்டுப் பணம் அனுப்புதல் மற்றும் சுற்றுலாத் துறையை வலுப்படுத்துவதன் மூலம் நாட்டின் வருமானம் அதிகரிக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.