’பசில் விளக்கமளிக்க வேண்டும்’ !!
ரஷ்ய – உக்ரைன் பிரச்சினைகளால், உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்க உள்ள நிலையில், இலங்கைக்கு எரிபொருளை ஏற்றிவந்திருக்கும் மூன்று கப்பல்களும் பழைய விலைக்கே எரிபொருளை ஏற்றிவந்துள்ளன என்று தெரிவித்த ஐ.தே.வின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க எம்.பி, எப்படியாவது அக்கப்பல்களுக்கான பணத்தை செலுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தார்.
மேலும், நாட்டின் பொருளாதார நிலைமைகள், 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் எவ்வாறு அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை தொடர்பிலும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பை விடுத்து, சபைக்கு விளக்கமளிக்க வேண்டும் எனவும் ரணில் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தின் நேற்றைய (22) அமர்வுகள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் ஆரம்பமான நிலையில், ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி உரையாற்றும்போதே ரணில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய ரணில், அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் இரண்டாவது உறுப்புரைக்கு அமைய வரவு செலவு திட்டம் எவ்வாறு அமுல்ப்படுத்தப்பட்டு வருகின்றதென நிதி அமைச்சர் சபைக்கு அறிக்கை ஒன்றை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
ரஷ்ய படைகள் உக்ரைனுக்குள் நுழைந்ததன் பின்னர் உலகில் எரிபொருளின் விலை அதிகரித்துள்ளது. இதன்படி ஒரு பரலின் விலை 115 டொலராக அதிகரித்துள்ளது என்றார்.
இதேவேளை ஐரோப்பிய நாடுகளில் இருந்து இயற்கை திரவ எரிவாயு பெற்றுக்கொள்வதை ரஷ்யா நிறுத்திவிட்டால், கட்டாரில் இருந்து அந்த அதனைப் பெற்றுக்கொள்ள நேரிடும். உலக சந்தையில் இயற்கை திரவ எரிவாயுவின் விலையும் அதிகரிக்கும். உலக சந்தையில் எரிபொருள், திரவ எரிவாயுவின் விலை அதிகரிக்கும் பட்சத்தில் இலங்கைப் பொருளாதாரத்திலும் அவை பாரிய தாக்கத்தை செலுத்தும் எனவும் ரணில் கூறினார்.
எனவே இது தொடர்பில் நிதி அமைச்சர் பாராளுமன்றத்துக்கு விளக்கமளிக்க வேண்டும். எரிபொருளை நாட்டுக்கு ஏற்றிவந்த மூன்று கப்பல்களும் பழைய விலைக்கே எரிபொருளை ஏற்றிவந்துள்ளன. எனவே எதாவதொரு வழியில் இக்கப்பல்களுக்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்த வேண்டும் எனவும் ரணில் வலியுறுத்தினார்.