சர்வதேசத்துக்கு செல்வதைத் தவிர வேறு வழியில்லை !!
ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதியைக்கோரி சர்வதேசத்திடம் செல்வதைத் தவிர கார்டினல் மெல்கம் ரஞ்சிதுக்கு வேறுவழியில்லை என தெரிவிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல, இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாம் கோரிய, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, தற்போது கிடைத்திருப்பதில் எந்தவிதமானப் பயனும் இல்லை எனவும் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான நேற்றைய (23) விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், இன்னும் சில நாட்களில் ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத் தொடர் ஆரம்பமாக உள்ளது.
ஆனால் இலங்கை மலக்கழிவு தாக்குதல் நடத்தப்படும் நாடாக மாறியுள்ளது. ஊடகவியலாளர்களுக்கு மலக்கழிவு தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகிறது. இதுவா ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு எனவும் அவர் வினவினார்.
ஈஸ்டர் தாக்குதலின் இறுதி அறிக்கை தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த அறிக்கை இரண்டு வருடங்களுக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டியது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்குகள் தாக்கல் செய்வதற்கு முன்னர் இந்த அறிக்கை கிடைத்திருக்க வேண்டும். தற்போது வழக்கு தாக்கல் செய்யப்பட்டு பலர் பாதிக்கப்பட்ட பலர் விடுதலையாகி வருகிறார்கள்.