மேகதாதுவில் அணைகட்ட வலியுறுத்தி காங்கிரஸ் 27-ந்தேதி மீண்டும் பாதயாத்திரை…!!!
காவிரியின் குறுக்கே ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே மேகதாதுவில் அணைகட்ட வலியுறுத்தி கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி ராமநகரில் இருந்து பெங்களூருவை நோக்கி காங்கிரஸ் பாதயாத்திரையை தொடங்கியது. கொரோனா காரணமாகவும், கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்தும் ஜனவரி 12-ந் தேதியே பாதயாத்திரையை காங்கிரஸ் நிறுத்தி இருந்தது. கொரோனா பரவலுக்கு பின்பு மீண்டும் பாதயாத்திரை தொடங்கப்படும் என்று மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் அறிவித்திருந்தார்.
அதன்படி, வருகிற 27-ந் தேதி மேகதாதுவில் அணைகட்ட வலியுறுத்தி மீண்டும் பாதயாத்திரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதயாத்திரை ராமநகரில் வருகிற 27-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம்(மார்ச்) 3-ந் தேதி பெங்களூரு பசவனகுடியை வந்தடைய உள்ளது. அன்றைய தினம் பசவனகுடியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வருகிற 27-ந் தேதி தொடங்கும் பாதயாத்திரையை, கர்நாடக மாநில மேலிட பொறுப்பாளர் ரனதீப்சிங் சுர்ஜிவாலா தொடங்கி வைக்க உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. தொடக்க விழாவில் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் ஹரிபிரசாத், முன்னாள் முதல்-மந்திரி வீரப்ப மொய்லி, மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
பாதயாத்திரையையொட்டி, மண்டியா மாவட்ட காங்கிரஸ் பிரமுகர்களுடன் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் ஆலோசனை நடத்தினார். அப்போது மண்டியாவில் இருந்து பாதயாத்திரையில் 20 ஆயிரம் பேர் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மறுநாள் (28-ந் தேதி) துமகூரு மாவட்ட காங்கிரசார் பங்கேற்க இருப்பதும் தெரியவந்துள்ளது. பாதயாத்திரையை வெற்றிகரமாக நடத்த டி.கே.சிவக்குமார் நடவடிக்கை எடுத்து வருகிறார்.