அமைச்சர்களின் வீடுகளில் மின்துண்டிப்பு இல்லை !!
நாட்டில் அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு காணப்படுகின்ற நிலையில், அதிகளவான நிதியை நெடுஞ்சாலைகளை அமைக்க ஒதுக்கீடு செய்ய வேண்டுமா என கேள்வி எழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண, தற்காலிகமாக நெடுஞ்சாலைகள் அமைப்பதை நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று (24) நடைபெற்ற தாவர, விலங்கினப் பாதுகாப்புத் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், நல்லாட்சி அரசாங்கத்தில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றிருந்தால், தற்போதைய அரசாங்கம் அதனை
கண்டறிய வேண்டும். போலியாக குற்றச்சாட்டுக்களை சுமத்தாது ஊழல் நடைபெற்றிருந்தால் விசாரணைகளின் ஊடாக அதனை நிரூபிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை தற்போது நாட்டில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. மருந்துபொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சீமெந்து இல்லை. பால்மாவை எங்கும் பெற்றுக்கொள்ள முடியாத நிலை உள்ளது. இப்படியான நாட்டில் மக்கள் வாழ்கிறார்கள் என்பது ஆச்சரியத்துக்குரியது.
இதற்காக அவர்களுக்கு பரிசீல்களை வழங்க வேண்டும். அமைச்சர்களின் வீடுகளுக்கு மின்சாரத் தடையில்லை. அவர்களின் வீடுகளில் ஜெனரேட்டர்கள் உள்ளன எனவும் தெரிவித்தார்.
அரசாங்கத்துக்கு இதயம் என்று ஒன்று இருந்தால் உயர்தரப் பரீட்சை நடைபெறும்போது மின்சாரத்தை துண்டிக்குமா? இதயத்தைத் தொட்டு சொல்லுங்கள் இந்நேரத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் அவசியமா? எனவும் அவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.