பெட்ரோல், டீசலுக்கு நாள் குறித்தார் கம்மன்பில !!
அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு 1,285.50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக தெரிவித்த வலுசக்தி அமைச்சர் உதய
கம்மன்பில, இந்த நிதியை திரட்டுவதற்கான முயற்களில் தாம் இறங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் நேற்றைய (24) அமர்வில் கலந்துகொண்டு எதிர்க்கட்சி தலைவர் எழுப்பியக் கேள்விக்குப் பதிலளித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், நாட்டில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை நாம் மறுக்கவில்லை. நாட்டை ஆட்சி செய்த அனைவரும் இதற்குப் பொறுப்புக்கூற வேண்டும். வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறையால், எரிபொருள் பெற்றுக்கொள்வதற்க எமக்கு மிகக் கடினமாக உள்ளது என்றார்.
நாட்டின் தற்போதைய நிலையில் பெட்ரோல் – 92 பத்து நாட்களுக்கும், பெட்ரோல் 95 நாற்பது நாட்களுக்கும், டீசல் எட்டு நாட்களுக்கும், சூப்பர் டீசல் எட்டு நாட்களுக்குமே கையிருப்பில் உள்ளது. இதேவேளை மேலும் 6 நாட்களுக்கு தேவையான டீசல் தற்போது இறக்குமதி செய்யப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.