பெண் போல் மிமிக்கிரி செய்து பண மோசடி!
அக்கரைப்பற்று இளைஞன் ஒருவனிடம் தனது குரலால் பெண்கள் போல மிமிக்கிரி குரலில் பேசி காதலிப்பது போல நடித்து பணமோசடியில் ஈடுபட்ட மட்டக்களப்பு ஆயித்தியமலையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (24) குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர்.
ஆயித்தியமலை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் முகநூல் பக்கத்தில் இருந்த அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனின் மெசேஞ்சர் ஊடாக உரையாடி அவரது தொலைபேசி இலக்கத்தை குறித்த இளைஞன் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் பெற்றுக் கொண்டுள்ளான்.
இதனை தொடர்ந்து அக்கரைப்பற்றைச் சேர்ந்த இளைஞனுடன் தொடர்ந்து உரையாடிவந்த நிலையில் குறித்த இளைஞன் திருமணம் முடிக்கவில்லை என தெரிந்து கொண்ட நிலையில் தனது பெரியம்மாவின் மகள் இருப்பதாகவும் அவளுக்கு திருமணம் பேசிவருவதாக குறித்த இளைஞனுக்கு தெரிவித்து பின்னர் முகநூல் பக்கங்களில் இருக்கும் ஒரு அழகான பெண் ஒருவரின் படத்தை அனுப்பி இது தான் எனது பெரியம்மாவின் மகள் என தெரிவித்துள்ளான்.
குறித்த இளைஞனும் அழகான பெண் படத்தை பார்த்ததும் அவனுக்கு அந்த பெண் மீது ஆசை ஏற்பட்டதை கண்டு கொண்ட ஆயித்தியமலை இளைஞன் வேறு தொபேசி இலக்கத்தில் இருந்து அந்த பெண் கதைப்பது போல மிமிக்கிரி குரலில் குறித்த இளைஞனுடன் கதைத்து வந்ததுடன் பெண்னின் தாயார் எனவும் மிமிக்கிரி குரலில் கதைத்து வந்துள்ளதுடன் தொலைபேசிக்கு ரீலோட் செய்யுமாறு கூறி அடிக்கடி அவனிடம் இருந்து பணத்தையும் வாங்கி வந்துள்ளான்.
இந்த நிலையில் கொழும்பில் மேசன் தொழில் ஈடுபட்டுவரும் அக்கரைப்பற்று இளைஞனுக்கு அந்த பெண் மீது காதல் ஏற்பட்டதையடுத்து அவளை திருமணம் முடிப்பதற்கான பேச்சுவார்த்தையில் இருவரும் ஈடுபட்டு வந்துள்ளனர்.
பெரியம்மாவின் மகளுக்கு சீதனமாக வீடு பணம் தருவதாகவும் அவர்கள் பணக்காரர் எனவும் பொய்களை கூறி வந்த நிலையில் பெண்ணின் பெற்றோர் மாப்பிளையை பார்ப்பதற்கு அக்கரைப்பற்றுக்கு வருவதற்கான திகதியை தீர்மானித்தனர்.
திகதி தீர்மானிக்கப்பட்டதையடுத்து மாப்பிள்ளை வீட்டினர் தமது வீட்டிற்கு வர்ணம் தீட்டி மற்றும் பெண் பகுதியினர் வரும்போது அவர்களுக்கான உணவு வழங்க பல ஆயிரம் ரூபா செலவு செய்து உணவு ஏற்பாடுகள் செய்து தீர்மானிக்கப்பட்ட திகதியில் காத்திருந்தனர்.
நேரம் பகல் 12 மணியை தாண்டியும் பெண் வீட்டாரை காணாததால் குறித்த ஆயித்தியமலை இளைஞனுக்கு தோலைபேசி அழைப்பை ஏற்படுத்திய போது, மாப்பிளை பார்ப்பதற்கு வேன் ஒன்றில் வெளியேறிய போது வீட்டின் வாசலில் பூனை குறுக்கால் போனது சகுணம் சரியில்லை அதனால் வரவில்லை என தெரிவித்து வேறு ஒரு தினத்தில் வருவதாக தெரிவித்துள்ளான்.
இதனை தொடர்ந்து மாப்பிளையை பார்ப்பதற்கு வருவதற்கு பல சாக்கு போக்குகளை தெரிவித்து வந்துள்ள நிலையில் பெண்னை பார்ப்பதற்கு பெண் வீட்டிற்கு தாங்கள் வருவதாக அக்கரைப்பற்று இளைஞன் தெரிவித்து அதற்கான திகதியான கடந்த 23ம் திகதி தீர்மானிக்கப்பட்டு அன்று பெண்ணை பார்ப்பதற்கு மாப்பிளை வீட்டினர் வான் ஒன்றை வாடைகைக்கு பெற்றுக் கொண்டு காலையில் மட்டக்களப்பை நோக்கி பிரயாணித்தனர்.
கல்முனையில் வைத்து ஆயித்தியமலை இளைஞனின் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்திய போது அந்த தொலைபேசி நிறுத்தப்பட்டிருந்தது.
பலமுறை முயற்சித்தும் அவ்வாறு அழைப்பு வந்துள்ளதையடுத்து பெண்ணின் விலாசம் தெரியாது என்ன செய்வது என தெரியாது நீண்ட நேரம் கல்முனையில் காத்துநின்றுவிட்டு அங்கிருந்து அக்கரைப்பற்று மாப்பிளை வீட்டினர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்றனர்.
இதன்பின்னர் அன்று மாலை அக்கரைப்பற்று இளைஞனுடன் தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி கொண்ட ஆயித்தியமலை இளைஞன் மன்னிக்கவும் தொலைபேசியின் பற்றி சார்ச் இல்லாததால் தொலைபேசி தானகாக நின்றுவிட்டது. நான் உங்கள் வீட்டிற்கு வருகின்றேன் என தெரிவித்து மட்டக்களப்பில் இருந்து பஸ்வண்டியில் அக்கரைப்பற்றுக்கு சென்ற நிலையில் அவனை தனது வீட்டிற்கு கூட்டிச் சென்று இரவு தங்கவைத்து உபசரிப்பு இடம்பெற்றதுடன் பெண் வீட்டிற்கு நாளைக்கு கூட்டிச் செல்வதாக தெரிவித்து கலந்துரையாடியுள்ளனர்.
அடுத்த நாள் 24 ம் திகதி வியாழக்கிழமை காலை குறித்த ஆயித்தியமலை இளைஞன் மற்றும் அக்கரைப்பற்று இளைஞன் அவனின் உறவினர்களான இரு பெண்களுடன் மட்டக்களப்பு பஸ்தரிப்பு நிலையத்துக்கு வந்தடைந்த பின்னர் பெண் வீடு கூளாவடியில் இருப்பதாகவும் பல சாக்கு போக்கு தெரிவித்து என்ன செய்வது என தெரியாது முழுசிக் கொண்டிருந்த அவனை அக்கரைப்பற்று இளைஞன் விடாப்பிடியாக பெண்வீட்டிற்கு கூட்டிச் செல்ல வற்புறுத்தியுள்ளான். அவனுக்கு என்ன செய்வது என தெரியாது கொக்குவில் பிரதேசத்திலுள்ள அவனின் தூரத்து உறவினர் வீட்டிற்கு கூட்டிச் சென்ற போது இவனின் நடவடிக்கையில் அக்கரைப்பற்று இளைஞனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அவன் உறவினரிடம் கூட்டிச் சென்ற நிலையில் அவன் தனது தாய் என அனுப்பிய படத்தை காட்டி இவனின் தாயாரா நீங்கள் என கேட்டபோது, அவர்கள் இல்லை என தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அக்கரைப்பற்று இளைஞன் உசாரடைந்து கொண்டு அவனை பிடித்துக்கொண்டு கொக்குவில் பொலிசாரிடம் சென்று தமக்கு நடந்ததை தெரிவித்து, இவனால் சுமார் ஒன்றரை இலச்சத்துக்கு மேலாக கடந்த 2 மாதத்தில் செலவாகியுள்ளதாக அக்கரைப்பற்று இளைஞன் தெரிவித்தான்.
இதனை தொடர்ந்து குறித்த இளைஞன் தான் மிமிக்கிரி குரலில் பெண்கள் போல கதைத்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதை ஓப்புக் கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டவரின் சகோதரி பொலிஸ் நிலையத்துக்கு சென்று பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று இளைஞனின் குடும்பத்தினரிடம் தமது கஷ்ட நிலையை தெரிவித்து சகோதரன் தவறு செய்துவிட்டார் என மன்னிப்பு கேட்டதையடுத்து அந்த இளைஞன் முறைப்பாடு செய்யாது சென்றுள்ளான். அதேவேளை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இளைஞனை ஆயித்தியமலை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணையை ஆயித்தியமலை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.