தலைநகர் கீவ்வில் குண்டு மழை: ரஷியா உக்ரைன் கடும் சண்டை- பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்…!!
ரஷியா – உக்ரைன் இடையே நேற்று முன்தினம் போர் ஏற்பட்டது.
ரஷிய படைகள் உக்ரைனுக்குள் ஊடுருவி சென்று கடும் தாக்குதலை நடத்தின. முதல் நாள் விமான தளங்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ நிலைகளை ரஷியா குண்டு வீசி தகர்த்தது.
2-வது நாளாக நேற்று அதிகாலையிலேயே உக்ரைன் நாட்டில் உள்ள பல்வேறு நகரங்கள் மீதும் ரஷிய போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதனால் உக்ரைனின் பல முக்கிய நகரங்கள் நேற்று ரஷியா வசமானது.
அங்கிருந்து தாக்குதலை தீவிரப்படுத்திக் கொண்டு தலைநகர் கீவ் நோக்கி ரஷிய படைகள் நகர்ந்தன. நேற்று பிற்பகலில் தலைநகர் கீவ் முழுவதையும் ரஷிய படைகள் முற்றுகையிட்டன. நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்து தலைநகருக்குள் உக்ரைன் ராணுவம் வர முடியாதபடி ரஷியா தடையை ஏற்படுத்தியது.
தலைநகர் கீவ் அருகே உள்ள காஸ்டோமல் விமான தளத்தை நேற்று இரவு ரஷியா கைப்பற்றியது. அங்கு ஹெலிகாப்டர்கள் மூலம் நூற்றுக்கணக்கான வீரர்களை ரஷியா தரை இறக்கியது. இதனால் உக்ரைன் அந்த பகுதிக்கு கூடுதல் ராணுவத்தை அனுப்பியது.
3-ம் நாளான இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் இருந்து தலைநகர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் ரஷியா-உக்ரைன் படைகளுக்கு இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. கீவ் நகரில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் இவான்கீவ் என்ற இடத்தில் மிகப்பெரிய மோதல் நடைபெற்றது.
அந்த மோதலில் இரு தரப்பிலும் மிகப்பெரிய உயிர் தேசம் ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது.
உக்ரைனில் தவிக்கும் மக்கள்
தலைநகர் கீவ்வை கைப்பற்றும் நோக்கத்தில் ரஷிய படைகள் முற்றுகையிட்டு கடும் தாக்குதல் நடத்தி வருவதால் உக்ரைன் முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் மத்தியில் பதட்டமும், பீதியும் ஏற்பட்டு உள்ளது. கீவ் நகரின் குடியிருப்பு பகுதிகளையும் ரஷிய படைகள் தாக்க தொடங்கி உள்ளன.
இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கீவ் நகரில் இருந்து வெளியேற தொடங்கி உள்ளனர். நேற்று இரவு தாக்குதல் அச்சத்தில் ஆயிரக்கணக்கானோர் மெட்ரோ ரெயில் நிலையங்களில் தஞ்சம் அடைந்தனர்.
இன்று அதிகாலை கீவ் நகரில் உள்ள மற்றொரு விமான தளத்தை கைப்பற்ற ரஷிய படைகள் கடும் தாக்குதலை நடத்தின. இந்த தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்து இருப்பதாக உக்ரைன் அதிபர் அறிவித்துள்ளார். இந்த சண்டையில் ஏராளமானோர் கொல்லப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் இதை ரஷியா மறுத்துள்ளது. கடந்த 2 நாட்களில் உக்ரைனின் 211 ராணுவ நிலைகளை தகர்த்து விட்டதாக ரஷியா அறிவித்துள்ளது. 80 பீரங்கிகள், 516 வாகனங்கள், 7 ஹெலிகாப்டர்கள், 10 ராணுவ விமானங்களை அழித்து இருப்பதாகவும் ரஷியா கூறி உள்ளது.
இதற்கிடையே தலைநகர் கீவ் முழுவதும் இணைய தள சேவையை ரஷியா வெற்றிகரமாக முடக்கி உள்ளது. இதனால் தகவல் தொடர்பு மேற்கொள்ள முடியாமல் உக்ரைன் ராணுவம் முடங்கி உள்ளது. இதை பயன்படுத்தி ரஷிய வீரர்கள் தாக்குதலை மேலும் அதிகப்படுத்தி உள்ளனர்.
உக்ரைன் அதிபர் தனது மாளிகையை விட்டு வெளியேறி ரகசிய இடத்தில் பதுங்கி உள்ளார். அங்கிருந்தபடி ரஷிய தாக்குதல் தொடர்பான தகவல்களையும் மற்ற உத்தரவுகளையும் வெளியிட்டவாறு உள்ளார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று வெளியிட்ட ஒரு தகவலில், ரஷிய படைகள் கீவ் நகருக்குள் நுழைந்து விட்டன. இன்று இரவுக்குள் கீவ் நகரம் முழுவதையும் ரஷிய படைகள் ஆக்கிரமிக்கக் கூடும் என்று கூறி உள்ளார்.
இதன் மூலம் தலைநகர் கீவ் கொஞ்சம் கொஞ்சமாக ரஷியா வசம் போய் கொண்டிருப்பது உறுதியாகி இருக்கிறது. எனவே ஓரிரு நாட்களில் ரஷியா-உக்ரைன் போரில் திருப்புமுனை ஏற்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.