உக்ரைனுக்கு உதவும் நட்பு நாடுகள் – வான் வெளியை பயன்படுத்த தடை விதித்தது ரஷியா…!!!
உக்ரைன் மீதான படையெடுப்பால் ஐரோப்பிய நாடுகளுடனான ரஷிய உறவு பாதிக்கப்பட்டுள்ளது. ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
ரஷியாவுக்கு எதிராக போரிடும் வகையில் உக்ரைனுக்கு, நட்பு நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருகின்றன. மேலும் லிதுவேனியா, லாட்வியா, எஸ்டோனியா மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகள், ரஷிய விமானங்கள் தங்கள் வான்வெளியை பயன்படுத்த தடை விதித்துள்ளன.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்த நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கும் வகையில் ரஷியா தனது வான்வெளியை மூடியதாக அந்நாட்டு அரசு விமானப் போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது.
முன்னதாக நேற்று ருமேனியா, பல்கேரியா, போலந்து மற்றும் செக் குடியரசு
விமானங்கள் தனது வான்வெளியில் பறப்பதற்கு ரஷியா அனுமதி மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரஷிய விமானங்கள் தனது வான்வெளியை பயன்படுத்த தடை விதிக்கும் நடவடிக்கைகளை ஜெர்மனி அரசு மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சர் வோல்கர் விஸ்சிங், ரஷிய விமானங்களுக்கு தடை விதித்து ஜெர்மனி வான்வெளியை மூடும் நடவடிக்கையை ஆதரிப்பதோடு, அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.