’சிலுவையில் சத்தியம் செய்ய முடியும்’ !!
சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த தமக்கு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எந்த தேவாலயத்திலும் சிலுவையில் வைத்து சத்தியம் செய்ய முடியும் என தெரிவித்தார்.
பொலன்னறுவையில் உள்ள தேவாலயமொன்றில் இடம்பெற்ற ஞாயிறு ஆராதனையின் பின்னர் உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் குறித்து அறிந்தே தான் வெளிநாடு சென்றதாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என அவர் மறுத்துள்ளார்.
இந்தத் தாக்குதல்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினரோ அல்லது பாதுகாப்புப் பிரிவினரோ தமக்கு அறிவித்திருந்தால் நாட்டை விட்டு வெளியேறியிருக்க மாட்டேன் என அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் இருக்கும் போது தாக்குதல்கள் குறித்து தமக்கு அறிவிக்கப்பட்டிருந்தால், உடனடியாக ஊரடங்குச் சட்டத்தை விதித்து, தேவையான நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தியிருப்பேன் என்றும் அவர் கூறினார்.
இலங்கையின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு அனைத்து பிரஜைகளும் ஏகமனதாக தீர்மானம் எடுப்பதற்கு தியாகங்களைச் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
ரஷ்யா – உக்ரேன்ன் மோதல்கள் தேசத்தில் நீடித்த விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்றும், இது எண்ணெய் பீப்பாய்விலை உயர்வினால் வெளிப்படும் என்றும் சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி, உலகத் தலைவர்கள் பல மோதல்களைத் தொடங்க முயற்சிக்கின்றனர் என்றார்.
தற்போது பதவிகளோ அதிகாரங்களோ முக்கியமில்லை என வலியுறுத்திய முன்னாள் ஜனாதிபதி, பல்வேறு பிரச்சினைகளினால் அவதியுறும் மக்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
உங்கள் கருத்து: