’இலங்கையின் சுற்றுலாத்துறைக்குப் பாதிப்பு’ !!
ரஷ்யா – உக்ரைன் யுத்தத்தால், உக்ரைனில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை எதிர்வரும் மாதங்களில் கடுமையாகக் குறைவடையும் என தெரிவித்துள்ள இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் தம்மிக்க விஜேசிங்க, இலங்கையின் சுற்றுலாத்துறையில் இது பாதிப்பை செலுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 24ஆம் திகதி வரையில் உக்ரைனில் இருந்து 12 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத்தந்திருந்ததாகவும், எனினும் எதிர்வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கை 6 ஆயிரமாகக் குறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
ரஷ்ய – உக்ரைன் யுத்தத்தால் வான்வழிப் பயணங்கள் பாதுகாப்பற்றதாக மாறியுள்ளது. இதனால், அதிகளவான உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என எதிர்பார்க்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வருவதை அவர்கள் முழுமையாக நிறுத்தாவிட்டாலும், உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் வருகையில் பாரியளவிலான வீழ்ச்சிகள் ஏற்படும் எனவும் கூறியுள்ளார்.