சப்ரிக்கு எதிராக முஸ்லிம் பெண்கள் ஆவேசம் !!
பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்யுமாறு கோரும் போராட்டத்தில் நீதியமைச்சர் அலி சப்ரிக்கு எதிராக முஸ்லிம் பெண்கள் ஆவேசமான முறையில் சில கருத்துக்களை முன்வைத்திருந்தனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், நேற்று (27) வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,
வடக்கு, கிழக்கு வாலிப முன்னணி தலைவர் கி. சேயோன்ஒருங்கிணைப்பில் மட்டக்களப்பு மாவட்ட வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணி தலைவர் லோ.தீபாகரன் தலைமையில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து போராட்டம் இடம்பெற்றது.
இந்த போராட்டத்தில் ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மட்டக்களப்பு மறை.மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை மற்றும் இந்து, இஸ்லாமிய மதத்தலைவர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்-முஸ்லிம் மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குமாறு முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த போராட்டத்தில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய சமாதான கூட்டமைப்பு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய முஸ்லிம் அரசியல் கட்சிகளும் இலங்கை ஆசிரியர் சங்கம், கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் உட்பட பல்வேறு பொது அமைப்புகளும் ஆதரவு வழங்கியிருந்தனர்.
இன்றைய இந்த கையெழுத்துப்பெறும் போராட்டத்தில் பெருமளவான முஸ்லிம் பெண்களும் கலந்துகொண்டு ஆதரவு வழங்கியிருந்தனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குமாறு வலியுறுத்தும் போராட்டம் நடைபெற்றதுடன், குறித்த தடைச்சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையிலேயே பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்யுமாறு கோரும் போராட்டத்தில் நீதியமைச்சர் அலி சப்ரிக்கு எதிராக முஸ்லிம் பெண்கள் ஆவேசமான முறையில் சில கருத்துக்களை முன்வைத்திருந்தமையினை அவதானிக்க முடிந்தது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.