தனியார் பஸ் சேவைகள் இரத்தாகும் அபாயம் !!
டீசல் கிடைக்காத காரணத்தினால் மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் சேவை இன்றுடன் (01) நிறுத்தப்படும் என, மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார்.
எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் மாகாணங்களுக்கு இடையிலான அரைவாசிக்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இயங்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
பஸ்களை இயக்குவோர் தங்களது எரிபொருள் தாங்கிகளை நிரப்ப நீண்ட வரிசையில் டீசலுக்கு காத்திருக்க வேண்டியுள்ளது எனவும் பயணிகளுடன் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார தெரிவித்தார்.
இந்த தொல்லை இல்லாமல் தனியார் பஸ்கள் எரிபொருள் நிரப்புவதற்கு முன்னுரிமை அளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, நேற்று (28) பிற்பகலில் இருந்து பயணத்தை குறைக்குமாறு நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
வழக்கமாக ஆறு பயணங்களை மேற்கொள்ளும் பஸ்கள், நேற்றையதினம் மூன்று பயணங்களை மாத்திரமே மேற்கொண்டதாகக் குறிப்பிட்டார்.
எனினும், அலுவலக நேரங்களிலும் மற்றும் மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு செல்லும் போது காலையிலும் மாலையிலும் பஸ் சேவைகள் வழங்கப்படும் என குறிப்பிட்டார்.
எரிபொருள் நிரப்பும் போது பஸ்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் பெரும்பாலான நிரப்பு நிலையங்களில் டீசல் இல்லை என்றும் குறிப்பிட்டார்.