;
Athirady Tamil News

அனைத்தும் எனது அல்லது அரசாங்கத்தின் தவறு அல்ல!!

0

இந்நாட்டில் காணி இல்லாத மக்களுக்கு, அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் காணிகளின் உரித்துரிமையைப் பெற்றுக் கொடுப்பதாக, எமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் உறுதியளித்திருந்தோம். அதன்படி, மகாவலி பிரதேச வலயக் காணிகளை வழங்கத் தீர்மானித்தாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஒரு இலட்சம் மகாவலி ரண்பிம காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஆற்றிய உரையில் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், 100,000 காணி உறுதிப்பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுத்தோம். காணிகளை எதிர்பார்ப்பவர்களுக்கும் மகாவலி பிரதேசத்துக்கு சொந்தமில்லாத காணிகளுக்கு உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவையே ‘சுபீட்சத்தின் நோக்கின்’ கீழ் மக்களுக்கு நாம் அளித்த வாக்குறுதிகள் ஆகும்.

அன்றைய பொருளாதார நிலை மற்றும் ஏனைய விடயங்களை நன்கு புரிந்துகொண்டே, நாம் இந்த நாட்டைக் பொறுப்பேற்றோம். ஆனால், நாடு என்னிடம் ஒப்படைக்கப்பட்டவுடன், உலகம் முழுவதையும் ஆக்கிரமித்த கொவிட் நோய்த்தொற்றின் பெரும் சவால்களை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்தச் சவாலை எப்படி எதிர்கொள்வது என்று எங்களுக்கு மட்டுமல்ல, முழு உலகத்துக்குமே தெரியவில்லை. இந்தத் தொற்று நோய்க்கு மருந்து இல்லை. தடுப்பூசி எதுவும் இல்லை. ஆனால், ஆரம்பம் முதலே அந்தச் சவாலை நாங்கள் வெற்றிகரமாக எதிர்கொண்டோம். முதல் 9 மாதங்களில் தொற்றுநோயை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி பொதுத் தேர்தலை நடத்த முடிந்தது.

அந்தத் தேர்தலிலும் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையை எமக்கு நீங்கள் வழங்கினீர்கள். அந்தச் சவாலான நேரத்தில் தான் நாம் தேர்தலில் வெற்றி பெற்றோம். இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தை உங்களிடம் முன்வைத்ததால், அந்தச் சவாலை நாங்கள் வெற்றிகரமாக எதிர்கொண்டோம்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், நாங்கள் பெரும் சவால்களுடன் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தோம். கொவிட் தொற்றுப் பரவல் கரணமாகப் பல சந்தர்ப்பங்களில் நாட்டை முடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பல்வேறு பகுதிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இவ்வாறான சவால்களை எதிர்கொண்டே எமது அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

குறிப்பாக, இன்று நானும் எனது அரசாங்கமும் இந்த நாட்டை ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் ஆட்சி செய்து வருகின்றோம். மக்களின் சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில், நமது பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தைப் பாதுகாத்துக்கொண்டே நாட்டை ஆட்சி செய்கிறோம்.

அனைவருக்கும் சுதந்திரம் கொடுத்துள்ளோம். துரதிர்ஷ்டவசமாக, இந்தச் சுதந்திரம் பலரால் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.

நாம் பல இக்கட்டான காலங்களைக் கடந்து வந்த ஒரு தேசம் ஆகும். பெரும்பாலும் இன்று வாழும் இளைஞர்களுக்கு இந்தக் காலங்களைப் பற்றிய புரிதல் இல்லை. ஜயவர்தன காலம் மற்றும் பிரேமதாச காலங்களை அவர்கள் கண்டதில்லை. அன்று சரத்சந்திர போன்றவர்கள் சாக்கடையில் தூக்கி எறியப்பட்ட காலம் ஒன்று இருந்தது. நீதிபதிகளுக்கு கல்லெறியப்பட்ட காலம் ஒன்று இருந்தது. தேர்தல் வரைபடம் சுருட்டப்பட்ட ஒரு காலம் இருந்தது. தேர்தலில் தோல்வியுற்றால், தேர்தல் தள்ளிப்போகும் காலம் இருந்தது. நமது இளைஞர்கள் அவற்றைப் புரிந்துகொள்ளவில்லை. ஒரு சிலர் அவற்றை மறந்துள்ளனர். ஊடகவியலாளர்கள் கடலில் தூக்கி எரியப்பட்ட காலம் ஒன்று இருந்தது. இந்த நாட்டில் பஸ்கள், தொழிற்சாலைகள் என்பன தீ வைத்து எரிக்கப்பட்ட காலம் ஒன்று காணப்பட்டது. இராணுவத்திலும் பொலிஸிலும் பணிபுரிந்தவர்களின் குடும்பங்கள் கொல்லப்பட்ட காலம் ஒன்று இருந்தது. இவ்வாறான காலங்களைக் கடந்தே இந்த நிலைக்கு வந்துள்ளோம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தின் போது, இந்த நாட்டில் கடந்த 30 வருடகாலமாக நிலவிய பிரிவினைவாத பயங்கரவாதச் செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வந்து உங்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுக்க முடிந்தது. இருப்பினும், அவர் இந்த நாட்டை ஒருங்கிணைத்து, ஒரு பாரிய அபிவிருத்தி யுகத்தை உருவாக்கினார். இதெல்லாம் 2015. அன்றும், அதாவது 2015ஆம் ஆண்டிலும் நடத்தப்பட்ட பொய்ப் பிரசாரங்களால் நம் நாட்டில் சிலர் ஏமாந்து போனார்கள். இன்று நாம் சந்திக்கும் சில பிரச்சினைகளுக்கு இவர்களின் குறுகிய கால ஆட்சியே காரணமாக அமைந்துள்ளது.

இன்று மின்சாரத்தைத் துண்டிக்காதீர்கள் என்கிறார்கள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அன்று மின்சாரத்தை சேகரிப்பதற்காக நுரைச்சோலையில் மின் உற்பத்தி நிலையத்தை நிறுவினார். ஆனால், பின்னர் ஆட்சியில் இருந்தவர்கள் எந்த மின் உற்பத்தி நிலையத்தையும் நிர்மாணிக்கவில்லை.

சுற்றுலாத்துறையின் மூலம் ஆண்டுக்கு 5 பில்லியன் டொலர்கள் வருமானத்தைப் பெறுகிறோம். கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக நாங்கள் அதை முழுமையாக இழந்துவிட்டோம். அதேபோன்று, வெளிநாட்டில் தொழில்புரியும் இளைஞர், யுவதிகளிடம் இருந்து கிடைத்த வருமானத்தையும் இழந்தோம். ஏனெனில், அந்த நாடுகளில் தொழில்கள் இல்லாமல் போயின. இப்படி நாம் பெற்ற வருமானம் 2020ஆம் ஆண்டிலிருந்து இல்லாமல் போய்விட்டது. பல்வேறு காரணங்களுக்காக கடந்த அரசாங்கங்கள் வாங்கிய கடன்களை மாதந்தோறும் செலுத்த வேண்டியுள்ளது. 2015இல் சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் 5 பில்லியன் மட்டுமே பெற்றிருந்தோம்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் 15 பில்லியன் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டனர். இந்த பணத்துக்கு மாதந்தோறும் வட்டி கட்ட வேண்டும். ஆனால், அவர்கள் நிதிக் கையிருப்பில் இவற்றைச் சேர்க்கவில்லை. அவற்றிலிருந்து எந்த அபிவிருத்தி நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படவில்லை. அந்த பணம் அனைத்தும் தேவையில்லாமல் செலவழிக்கப்பட்டது. இந்தக் காரணங்களால்தான் இன்று இந்த அந்நியச் செலாவணிச் சிக்கலைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. இவை அனைத்தும் எனது அல்லது எனது அரசாங்கத்தின் நிதி நிர்வாகத்தின் கீழ் இடம்பெற்ற தவறு அல்ல.

அரசாங்கம், எதிர்க்கட்சி மற்றும் மக்கள் இணைந்துச் செயற்பட வேண்டும் என நான் நம்புகிறேன். உலகம் முழுவதையும் பாதிக்கும் இவ்வாறானதொரு சூழ்நிலையில் நாட்டைக் கட்டியெழுப்ப எதிர்க்கட்சிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். வேலைநிறுத்தம் போன்ற குழப்பகர, தேவையற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுதல், பொய்ப் பிரச்சாரங்களில் ஈடுபடுத்தல் இவையெல்லாம் பொறுப்புள்ள எதிர்க்கட்சியின் செயல்கள் அல்ல. இந்த பொய்களை நம்பி ஏமாறாதீர்கள். அன்று பொய்களால் ஏமாற்றப்பட்டு இந்த நாடு என்ன ஆனது என்று உங்களுக்குத் தெரியும். அதனால்தான் எங்களுக்கு மீண்டும் இவ்வளவு அதிகாரம் வழங்கப்பட்டது. பெரும்பான்மை சிங்கள மக்களால் நான் அதிகாரம் பெற்றேன் என்பது இரகசியமல்ல. அப்போது தமிழ், முஸ்லிம் வாக்குகள் இல்லாமல் எவராலும் வெற்றிபெற முடியாது என்ற கருத்து நிலவியது. ஆனால் 69 இலட்சம் பேர் எனக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தினார்கள். மக்கள் அன்று அநீதி இழைக்கப்படுவதாக உணர்ந்ததால் தான் எனக்கு இவ்வளவு வாக்குகளை வழங்கினார்கள்.

எனக்கு வாக்களிக்க பல விடயங்கள் காரணமாகின. முதலாவதாக, இந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு இல்லாதொழிக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து, நாட்டை ஒன்றிணைத்து, பிரிவினைவாத பயங்கரவாதம் இந்த நாட்டில் மீண்டும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உருவாக்கினார். உளவுத்துறை பலப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு மாகாணத்திலும் இராணுவம் ஸ்தாபிக்கப்பட்டது. இவற்றின் காரணமாக பயங்கரவாதச் செயற்பாடுகள் இன்றி நாட்டில் பணியாற்ற முடிந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக முன்னைய அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித முன்னுரிமையும் வழங்கவில்லை. அன்று நாங்கள் எடுத்திருந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முற்றிலுமாகக் கைவிடப்பட்டன. அப்போது இராணுவ வீரர்களின் மனநிலை குலைந்து போனதை நீங்கள் அறிவீர்கள். உளவுத்துறை செயலிழந்தது. இராணுவ வீரர்கள் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு கடுமையாகத் துன்புறுத்தப்பட்டனர். புலனாய்வுத்துறை அதிகாரிகள் துன்புறுத்தப்பட்டனர். எமக்கு எதிராக, எமது நாட்டுக்கு எதிராக, ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் பிரேரணையைச் சமர்ப்பித்து, எமது நாட்டின் இறையாண்மை அழிக்கப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கும். அதேபோன்று கடந்த அரசாங்கத்துக்கு எதிராகவும் குறிப்பாக சிங்கள பௌத்தர்களுக்கு எதிராக, அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதாக ஒரு நம்பிக்கை இருந்தது. அதனால்தான் அதிகளவில் வாக்களித்து எங்களை ஆட்சிக்குக் கொண்டு வந்தனர்.

அன்று நீங்கள் இழந்து கொண்டிருந்த தீகவாபி, கூரகல, முஹுது மஹா விஹாரை உள்ளிட்ட எமது பாரம்பரிய உரிமைகளை இன்று உங்களுக்கு நாங்கள் பாதுகாத்துத் தந்துள்ளோம். கிழக்கில் எமது பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் வகையில் செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், அந்த இடங்களுக்குப் பொருத்தமான அதிகாரிகளை நியமித்து, சில காலமாகக் கைவிடப்பட்டிருந்த பாதுகாப்புப் பணிகளை மீண்டும் ஆரம்பித்துள்ளோம். அதேபோன்று, நாம் ஜெனீவா பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்குவதிலிருந்தும் விலகிக் கொண்டோம். இந்த நாட்டின் பாதுகாப்பை நாம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளோம். நமது பாரம்பரியத்தை பாதுகாக்க நாங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டோம். கொவிட் தொற்றுநோய்க்கு முகங்கொடுத்துக்கொண்டே கடந்த இரண்டு ஆண்டுகளில் இவைகளை நாம் முன்னெடுத்தோம்.

அதேபோன்று, இந்தக் காலப்பகுதியில் உள்நாட்டுக் கைத்தொழிலை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம். அவை தற்போது வெற்றி பெற்று வருகின்றன. உள்நாட்டுக் கைத்தொழிலை மேம்படுத்தும் நடவடிக்கையாக, சில பொருட்களின் இறக்குமதிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. சில தானியங்கள் தடை செய்யப்பட்டன. இந்த ஆண்டு நடுப்பகுதியில், எங்களுக்குத் தேவையான பீங்கான்களை உற்பத்தி செய்துவிடுவோம். அவை இதுவரை இறக்குமதி செய்யப்பட்டவை. உள்நாட்டு வர்த்தகர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன. அவர்களின் வரிகளை நீக்கினோம். சிலர் எங்கள் மீது குற்றஞ்சாட்டினார்கள். அந்த வரிகள் நீக்கப்படாவிட்டால், இந்தக் கொவிட் காலத்தில் அவர்கள் மிகவும் கடினமான சூழ்நிலைக்கு ஆளாக நேரிட்டிருக்கும். இதன் காரணமாக ஒவ்வொரு உள்நாட்டு உற்பத்தியும் இன்று இலாபகரமாக மாறியுள்ளது. இந்த நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள விவசாயிகளை நாங்கள் நம்புகிறோம். உங்களுக்கு உரம் இலவசமாக வழங்கப்படும் என்று கூறினேன். கூறினவாறே அவற்றை வழங்கினோம். நெல்லின் உத்தரவாத விலையை அதிகரிப்போம் என்றும் நாம் கூறினோம். அதே போன்று நாம் விலையை அதிகரித்தோம். பசுமை விவசாயத்தை தொடங்குவோம் என உறுதியளித்தோம். துரதிர்ஷ்டவசமாக அந்தக் கருத்தை விவசாய சமூகத்தினரிடம் சரியாகக் கொண்டுசெல்ல முடியவில்லை. அவர்களுக்குத் தெளிவூட்ட முடியவில்லை. இதன் காரணமாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனையின் கீழ் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. அப்பகுதியில் உள்ள விவசாயச் சமூகத்தின் சுகாதார நிலை மோசமடைந்து வருவதை கருத்திற்கொண்டு இந்த முடிவை எடுத்தோம். அதேபோன்று, மண் சிதைவு தொடர்பாகவும் சுற்றுச்சூழலின் அழிவு குறித்தும் சிந்தித்தே அம்முடிவை நாம் எடுத்தோம். நீர்வள அழிவு குறித்து ஆய்வு செய்து, எதிர்காலச் சந்ததியினருக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில இலைகளைச் சேர்த்து உரம் செய்து சேதனப் பசளை தயாரிக்கப்படுவதில்லை. அதன் தொழில்நுட்பம் மிக உயர்ந்ததாகும்.

சேதனப் பசளையைப் பயன்படுத்தி, இரசாயன உரத்தைத் பயன்படுத்தி பெற்றுக்கொள்ளும் அதே விளைச்சலைப் பெறலாம். ஆனால், அது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விவசாயி தனது வருமானத்தைப் பெருக்க வழிவகை செய்ய வேண்டும். இதுகுறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கடந்த போகத்தில் சில குறைபாடுகள் இருந்தன. இந்த போகத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க எங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். சோளம் போன்ற சில பயிர்களுக்கு இரசாயன உரங்கள் தேவைப்படுகின்றன. நாங்கள் அதற்கு அனுமதி வழங்கியுள்ளோம். குறிப்பாக, நமது நாட்டின் உற்பத்திகளை மேம்படுத்துவது அவசியம். அதுதான் நம் நாட்டின் கொள்கை. தொழில்நுட்ப விவசாயத்தை நமது இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அவர்கள் முன்பு போல் விவசாயம் செய்ய விரும்புவதில்லை. அவர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். அவர்கள் தொழில்முனைவோராக இருக்கலாம். அவர்கள் விவசாய உற்பத்திப் பொருட்களைப் பயன்படுத்தி ஏற்றுமதி செய்யலாம். அதன் மூலம் தொழில்கள் தொடங்கலாம். இவைகளை நாம் நமது இளைஞர்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டும். அதற்கு இளைஞர்களை விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பின் பக்கம் திருப்ப வேண்டும்.

நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நமது நாட்டின் இளைஞர்களாகிய உங்களிடமிருந்த ஆர்வத்தை அவ்வாறே மீண்டும் இந்நாட்டில் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளவும் அபிவிருத்தியை முன்னெடுக்கவும் முன்வருமாறு நான் உங்களை அழைக்கிறேன். எதிர்காலத்தில் நாங்கள் உங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவோம் என்று உறுதியளிக்கிறோம்.

அரச ஊழியர்களை ஊக்குவிக்க, நான் தனிப்பட்ட முறையில் அரச நிறுவனங்களுக்குச் செல்கிறேன். குறிப்பாக மக்களின் வாழ்க்கை பொதுச் சேவையை நம்பியே உள்ளது. பொதுமக்கள் எல்லாவற்றுக்கும் அரச அதிகாரிகளிடம் தான் செல்ல வேண்டியுள்ளது. அந்த மக்களின் பணிகளை விரைந்து முடிக்குமாறு அரச அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன். ஒருவேளை இன்னும் சட்ட சிக்கல்கள் இருக்கலாம். அவற்றை அகற்ற வேண்டும். சட்டங்கள் மக்கள் நலனுக்கானது.

சில பகுதிகளில் பால் பண்ணையாளர்களுக்கு பிரச்சினை உள்ளது. அவர்களின் கால்நடைகள் காட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அந்த மேய்ச்சல் தரவைகளை விவசாயிகளுக்கு வழங்குமாறு நான் அமைச்சரிடமும் கூறினேன். புல் இல்லை என்றால் பால் அளவு அதிகரிப்பது எப்படி? மேலும், சில பகுதிகளில் பாரம்பரியமாக பயிரிடப்பட்ட நிலங்கள் வனப் பாதுகாப்பின் மூலம் எல்லைகள் இடப்பட்டு அவர்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளன. நான் அதனையும் நீக்கிவிட்டேன். சில பகுதிகளில் அந்த பிரச்சினை இன்னும் உள்ளது.

இவையும் அகற்றப்பட்டு விவசாயிகள் பயிர்ச் செய்ய வாய்ப்பு அளிக்கப்படும். நாம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகம் மற்றும் நாடாகும். இவை மாறினால் மட்டுமே உள்நாட்டுப் பொருளாதாரத்தை உயர்த்த முடியும். அந்நியச் செலாவணியை மாத்திரம் நம்பி இருக்காமல், நம்மால் இயன்ற அனைத்தையும் இந்த நாட்டில் உற்பத்தி செய்ய வேண்டியது அவசியம்.

இன்று நாங்கள் உங்களுக்குக் வழங்கிய ஒவ்வொரு அங்குல நிலத்தையும் பயன்படுத்தி பயிர்ச் செய்கையில் ஈடுபட வேண்டும். நாங்கள் ஒன்றிணைந்து சுபீட்சத்தை நோக்கிப் பயணிப்போம் என்று கேட்டுக்கொள்வதோடு, உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் ஆசிகள் கிடைக்க வேண்டுகிறேன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.