மலையகப் பகுதிகளுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு!!
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள சுற்றுலா பிரதேசங்களைப் பார்வையிடுவதற்காக வெளிநாட்டு சுற்றலா பிரயாணிகள் அதிகமாக வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் டெவோன்,சென்கிளையார் உள்ளிட்ட நீர் வீழ்ச்சி பிரதேசங்களில் அதிகமான சுற்றுலா பிரயாணிகள் வருகை தருவதாகவும் இதனால் தங்களுடைய சுற்றுலா துறைச்சார்ந்த தொழில்கள் வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் சுற்றிலா பயணிகள் வழிகாட்டியொருவர் தெரிவித்தார்.
அவர் கருத்து தெரிவிக்கையில்,
தற்போது அதிகமான சுற்றலா பிரயாணிகள் வருகை தருவதாகவும் தற்போது ஹோட்டல்களில் அதிகமான சுற்றி பிரயாணிகள் இருப்பதாகவும் இதனால் தங்களுக்கு தொழில் சூடுபிடித்துள்ளதாகவும் டீசல் பற்றாக்குறை காரணமாக தங்களுக்கு சிறிய பாதிப்புக்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும் இவர் மேலும் தெரிவித்தார்.
இதேநேரம் மலையகப் பகுதிக்கு வரும் சுற்றுலா பிரயாணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதனால் இன்று (05) கண்டியிலிருந்து தெமோதர வரை அதிசொகுசு புகையிரதம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த புகையிரதம் கண்டியிலிருந்து ஒவ்வொரு நாளும் காலை 7.00 மணிக்கு ஆரம்பமாவதாகவும், குறித்த புகையிரதம் ஹட்டன் நானுஓயா எல்ல உள்ளிட்ட சுற்றுலா தலங்களை மையப்படுத்தி மாத்திரம் நிறுத்தப்படுவதாகவும் சுற்று பிரதேசங்களில் புகையிரதத்தினை நிறுத்தி புகைப்படங்கள் எடுப்பதற்கும் மற்றும் பார்வையிடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் புகையிரத நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார்.
குறித்த பயணத்திற்காக முதலாம் வகுப்புக்கு 5,000 ரூபாவும் இரண்டாம் வகுப்புக்கு 4,000 ரூபாவும் அறவிடப்படுவதாகவும் குறித்த புகையிரத பயணத்தில் வெளிநாட்டவர் மாத்திரமின்ற உள்நாட்டவர்களும் செல்லலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.