கொழும்பு துறைமுக நகரத்தில் பணமோசடிக்கு எவ்வித இடமுமில்லை!!
கொழும்பு துறைமுக நகரத்தில் பணமோசடிக்கு எவ்வித இடமுமில்லை எனவும், அவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராகக் கடுமையான சட்டங்களை அமுல்படுத்த முடிமெனவும் துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகமும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளருமான கலாநிதி பிரியத் பந்து விக்கிரம தெரிவித்தார்.
´துறைமுக நகரமும் எதிர்கால பொருளாதாரமும்´ என்ற தொனிப்பொருளில் நேற்று (04) ஜனாதிபதி ஊடக மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். கலாநிதி பிரியத் பந்து விக்கிரம மற்றும் துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழுவின் உறுப்பினர் சாலிய விக்ரமசூரிய ஆகியோர் கலந்துகொண்ட ஊடக சந்திப்பை ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க நடத்தினார்.
துறைமுக நகரத்தின் அடிப்படை பௌதிக நிர்மாணப் பணிகள் 2022ஆம் ஆண்டின் இறுதிக்குள் பூர்த்தி செய்யப்பட்டு, முதற்கட்டப் பணிகள் நிறைவடையும் என கலாநிதி பிரியத் பந்து விக்கிரம தெரிவித்தார்.
இதுவரை, நிதி முகாமைத்துவம், வங்கி நடவடிக்கைகள், முதலீட்டு பதிவு மற்றும் குறித்த சட்ட விதிமுறைகள் முடிக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட துறைமுக நகர மேம்பாடு மற்றும் அது தொடர்பான அபிவிருத்தி விதிமுறைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு, அவை விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர், எந்தவொரு முதலீட்டாளரும் குறித்த சட்ட மற்றும் விதிமுறைகளின் பிரகாரம் முதலீடு செய்யலாம்.
துறைமுக நகர் முழுமையாக, இலங்கைக்குரிய இந்நாட்டு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஒரு நிலமாக இருப்பதோடு, அதன் முகாமைத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற, துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு இலங்கையின் அரசாங்கம், ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இதில் சீன நிறுவனம் முதலீடு செய்தாலும், அந்த நிலம் எந்த வெளி நாட்டுக்கும் சொந்தமானது அல்ல, குத்தகை அடிப்படையில் அதில் உள்ள காணிகளை எந்தவொரு நாட்டின் நிறுவனத்திற்கும் பெற்றுக்கொள்ள முடியும்.
துறைமுக நகர் என்பது யாருடைய புவிசார் அரசியல் தேவைகளுக்கான நிலம் அல்ல எனவும், அதன் ஒரே நோக்கம் வர்த்தகம் மற்றும் வணிக நடவடிக்கைகள் மட்டுமே எனவும் பிரியத் பந்து விக்கிரம அவர்கள் மேலும் தெரிவித்தார். வர்த்தகம் தொடர்பான பரிவர்த்தனைகள் மட்டுமே இங்கு நடைபெறுகின்றன. யாருக்கும் சிறப்பு முன்னுரிமை இல்லை. முதலீட்டாளர்களைக் கையாள்வது பொருளாதார ஆணைக்குழு மூலம் இடம்பெறுகிறது.
“துறைமுக நகரம் பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்ட ஒரு வலயமாகும்” என்ற கருத்தை நிராகரித்த பிரியத் பந்து விக்கிரம அவர்கள், இலங்கையில் உள்ள எவரும் துறைமுக நகருக்குள் இலவசமாகப் பிரவேசிக்கலாம் என்றார். தற்போதுள்ள எந்தக் கடைகளில் இருந்தும் பொருட்களை கொள்வனவு செய்யவும் மற்றும் முதலீடு செய்யவும் வாய்ப்புள்ளது. அதன் பாதுகாப்பு நடவடிக்கைகளை இலங்கை பொலிஸ் திணைக்களம் மேற்கொள்கிறது.
இந்நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைப்பதில் துறைமுக நகரம் ஒரு முக்கிய மைல் கல்லாக அமையும் எனவும், இதில் பணியாற்றுவதன் மூலம் இந்நாட்டு மக்கள் அந்நியச் செலாவணியை ஈட்ட முடியும் எனவும், இதனை மக்கள் நேர்மறையாகப் பார்க்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த பிரியத் பந்து விக்கிரம அவர்கள், துறைமுக நகரத்தில் எந்தவொரு வெளிநாட்டு நாணயத்தையும் பயன்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார். அதேபோன்று எந்தவொரு இலங்கையரும் இலங்கையில் செல்லுபடியாகும் நாணயங்களைப் பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. அதன் ஊழியர்களில் 25 சதவீதமானவர்கள் வெளிநாட்டுப் பணியாளர்களாக தொழில்களுக்கு விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்ப்பதோடு, அதன் மூலம் அவர்களின் சிறப்பான அறிவை உள்நாட்டு தொழிலாளர்களுக்குப் பெற்றுக்கொள்ளவும் சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.
ஏற்கனவே பல முதலீட்டாளர்கள் இங்கு முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், உயர்மட்ட முதலீட்டாளர்களில் இந்நாட்டிற்கு அதிக வருமானத்தைப் பெற்றுக்கொடுக்கும் முதலீட்டாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் எனவும் ஆணைக்குழுவின் உறுப்பினர் சாலிய விக்ரமசூரிய தெரிவித்தார்.