;
Athirady Tamil News

சீரழிந்த தாயகத்தை கட்டியெழுப்ப அனைவரும் அணி திரள வேண்டும்!!

0

பால்மாவிற்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி கடைகளில் கஞ்சா விற்பது போல் விற்பதை எமது நாட்டு மக்கள் ஒரு போதும் மறக்க போவதில்லை. நாம் இவ்வளவு காலமும் பயணித்த அந்தப் பாதையை விட்டு மாற்றுப் பாதையை காண்பதற்காகவே தற்போது நாடு முழுவதும் பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

மீனவர்கள் கடலுக்கு சென்று ஆழ் கடல் மீன்களை பிடிக்க முடியாத அளவிற்கு இன்று எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினரும், தேசிய மக்கள் சக்தியின் தலைவருடான அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியிலுள்ள தனியார் வரவேற்பு மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சீரழிந்த தாயகத்தை கட்டியெழுப்புகின்ற தீர்வு நிகழ்வு நேற்று (04) இரவு தேசிய மக்கள் சக்தியின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.ஆதம்பாவா தலைமையில் இடம்பெற்ற வேளை அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, இன்று எமது நாடு பாதாளத்திற்கு சென்று விட்டது. நாம் இதனை இப்படியே விட்டு வைப்போமேயானால் எமது எல்லா வளங்களையும் வெளிநாட்டுக்கு விற்று அமைச்சர்களும் அரசில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களில் தங்கியிருக்கும் வர்த்தக பிரமுகர்களும் வசதிபடைத்தவர்களாக சந்தோசமாக சுகபோக வாழ்க்கையை அனுபவிப்பார்கள். ஆனால் எமது நாட்டிலுள்ள ஏனைய மக்கள் பால்மாவிற்காகவும், எரிவாயுக்காகவும் , சீமேந்திக்காகவும் , எரிபொருட்களுக்காகவும் நீண்ட வரிசையில் கால்கடுக்க நின்று கூடுதல் விலைகொடுத்து பொருட்களை கொள்வனவு செய்யும் மிகவும் மோசமான நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே தான் தாங்கள் ஆட்சிபீடம் ஏற வேண்டும் நாட்டை ஆளவேண்டும் என்பதற்காக ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலின் போதும் சில ஊர்களில் முஸ்லீம்களுக்கெதிராக இனவாதத்தைத் தூண்டினார்கள். அதில் சிங்கள மக்களை கிளர்ச்சியடைய செய்து அவர்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஆட்சிபீடமேறினார்கள்.அதன் பின்னர். இன்று நாட்டில் நடப்பதென்ன என்பது நாம் எல்லோருக்கும் புரிகின்றது அல்லவா? தேசிய மக்கள் சக்தியில் படித்தவர்கள், மீனவர்கள், விவசாயிகள் , நாளாந்த கூலி வேலை செய்வோர், அரச உத்தியோஸ்தர்கள், தனியார் நிறுவன உத்தியோஸ்தர்கள், அங்கம் வகிக்கின்றார்கள். ஆனால் கள்ளவர்கள் மட்டும் எம்மிடம் இல்லை. அதனால் தான் அச்சமின்றி நாடு முழுவதும் மக்கள் மன்றத்தின் முன் தோன்றக்கூடியதாகவுள்ளது.

தற்போது பெற்றெடுத்த தனது பிள்ளைகளுக்கும், மனைவிக்கும் உணவு ஊட்முடியாமல் குடும்ப தலைவன் தற்கொலை புரியும் நிலையும், காலகாலமாக விவசாயத்தை ஜீவனோபாயமாக மேற்கொண்ட விவசாய பெருமக்கள் உரமில்லாமல் வேளாண்மை செய்கையில் பெரும் நஸ்டத்தையடையும் நிலையும், தமது அன்றாடசமையல் செயற்பாட்டுக்காக பயன்படுத்தும் எரிவாயுவுக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி பின்னர் அதிகரித்த விலையில் அதனை விற்பனை செய்தமையும்,பால்மாவிற்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி கடைகளில் கஞ்சா விற்பது போல் விற்பனைக்கு விட்டதனையும் எமது நாட்டு மக்கள் ஒரு போதும் மறக்க போவதில்லை.

நாம் இவ்வளவு காலமும் பயணித்த அந்தப் பாதையை விட்டு மாற்றுப் பாதையை காண்பதற்காகவே தற்போது நாடு முழுவதும் பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது. நீண்டகாலமாக எங்களை ஆட்சி செய்த இரு கட்சிகளும் மக்களை நடுக்காட்டில் தவிக்க விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அம்பாரை மாவட்டம் இலங்கையில் அதிக அளவில் நெல் உற்பத்தி செய்கின்ற மாவட்டம் ஆகும். இருந்தும் அவர்களது விவசாய உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய முடியாத ஒரு நிலை இப்பொழுது ஏற்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு சென்று ஆழ் கடல் மீன்களை பிடிக்க முடியாத அளவிற்கு இன்று எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கின்றது இருந்தும் சிலர் இந்த பொருட்களை பதுக்கி வைத்து அதிக கூடிய விலைக்கு விற்றும் வருகின்றனர்.

இந்த நாட்டில் சாதாரண குடிமக்களால் வாழ்க்கை நடத்த முடியாத நிலை இன்று தோன்றியுள்ளது. நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கின்றது வெளி நாடுகளிடம் பிச்சை எடுக்க வேண்டிய கையேந்த வேண்டிய நிலைமைக்கு எமது நாட்டை தள்ளியுள்ளார். அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், இந்தியா, சீனா, ரஷ்யா, மத்திய கிழக்கு நாடுகள் என்பவற்றில் பால், அரிசி, சீமேந்து, இரும்பு, வெங்காயம், எரிபொருட்கள் என்பவற்றை பெற்றுக் கொள்வதற்காக இன்று அந்த நாடுகளுக்கு சென்று கடன் கேட்கின்ற நிலைமைக்கு ஆளாகி வருகின்றனர்

சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ, பறங்கியர் உள்ளிட்ட மக்கள் வாழுகின்ற இந்த நாட்டில் உயிர் வாழ்ந்து, இறந்து எமது எலும்புக்கூடுகள் உரமாக மாறும் தாய்நாடு தான் இந்த இலங்கை தீவு. நாட்டில் புரையோடிப் போயுள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பி இனங்களுக்கிடையிலான பரஸ்பர ஒற்றுமையை ஏற்படுத்தி கள்வர்களின் கோட்டையான எமது தாய் நாட்டை மீட்டு; வெளிநாடுகளிடம் பிச்சை கேட்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து எமது தாய் நாட்டை எதிர்கால சந்தத்தினர் நிம்மதி மூச்சுவிடக்கூடியவாறு மாற்றியமைக்க சீரழிந்த தாயகத்தை கட்டியெழுப்ப அனைவரும் அணி திரள வேண்டும்.

இந்த நாட்டை எமக்கு வாழக்கூடிய ஏற்ற நாடாக தயாரித்துக் கொள்ள வேண்டும். எமது பிள்ளைகளின் எதிர்காலம் நம்பிக்கை ஏற்படும் என்ற வகையில் எமது நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சியடைந்த உலக நாடுகளுக்கு ஒப்பாக சகல இன மக்களிடையேயும் ஒற்றுமையை ஏற்படுத்தும் நாடாக இந்த நாட்டை உருவாக்க வேண்டும் என கூறினார்.

இதே வேளை சாய்ந்தமருதைச் சேர்ந்த, சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனம் ( FIFA ) சர்வதேச காற்பந்தாட்ட நடுவராக கடமையாற்றிவரும் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஏ.எம்.ஜப்ரான், இலங்கை சார்பில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் பெற்ற வீரரும், கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி உடற்கல்வித்துறை ஆசிரியருமான எம்.வை.எம்.றக்கீப் மற்றும் ஐம்புலன்களால் 5 சாதனைகளை 12 நிமிடத்தில் நிகழ்த்தி சோழன் உலக சாதனை புத்தகத்தில் (cholan book of world records) தடம் பதித்த உலக சாதனை வீரர் எம்.எஸ்.எம்.பர்ஸான் ஆகியோரை பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.