பொலிசாரால் கடுமையாக தாக்கப்பட்ட வலி தென்மேற்கு பிரதேசசபை உறுப்பினர்!! (படங்கள் & வீடியோ)
இளவாலை பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து பொலிசாரால் கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படும் வலி தென்மேற்கு பிரதேசசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேசசபை உறுப்பினர் ஜோன் ஜிப்ரிகோவும், அவரது சகோதரியும் நோயாளர் காவு வண்டியின் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இன்று விசாரணைக்கு என அழைத்த பொலிசார் தம் மீது தாக்குதல் நடத்தியதாக பிரதேசசபை உறுப்பினர் வழங்கிய தகவலையடுத்து, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
”பிரதேசசபை உறுப்பினர் ஜிப்ரிகோவும்,அவரது சகோதரியும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். ஜிப்ரிகோவின் ஆடைகள் கிழிந்துள்ளன. அவர் நடக்க முடியாத நிலையில் காணப்பட்டார். அவரது சகோதரி மயக்கமடைந்து காணப்பட்டார். நோயாளர் காவுவண்டி மூலம் அவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்கிறோம்” என நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.
இருவரும் தற்போது தெல்லிபளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சில தினங்களின் முன்னர், அங்கஜன் இராமநாதனின் ஆதரவாளர் என கூறப்படும் ஒருவர் பிரதேசசபை உறுப்பினர் ஜிப்ரிகோவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அநாகரிகமாக நடந்ததாகவும், அவர் தாக்கப்பட்டதாகவும் செய்தி வெளியானது.
இந்த நிலையில், அத்துமீறி நுழைந்து தாக்குதலிற்குள்ளானதாக கூறப்படும் நபர், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன், வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்றார்.
அவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பிரதேசசபை உறுப்பினரும், அவரது சகோதரியும் இன்று இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டனர்.
இந்த நிலையிலேயே தாக்குதல் இடம்பெற்றதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து பெருமளவானவர்கள் இளவாலை பொலிஸ் நிலையத்தில் திரண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”