’ஆட்சியை கவிழ்க்க முயன்றால் பேரிழிப்பு ஏற்படும்’ !!
மஹிந்தவின் பெயரை பயன்படுத்தாது எவராலும் அரசியல் செய்யவோ, கூட்டம் கூட்டவோ முடியாதென தெரிவிக்கும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, மஹிந்த சூறாவளியின்றி முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பிலவுக்கு அரசியல் செய்ய முடியாதெனவும் தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று முன்தினம் (05) நாரம்மல பிரதேச சபையின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இருப்பதாலேயே எங்களை எங்கு சென்றாலும் மதிக்கிறார்கள். இதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ கூறிய வார்த்தைக்காகவே ஜனாதிபதிக்கு 69 இலட்ச மக்கள் வாக்களித்தனர் என்றார்.
எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு செய்ததையே சிலர் ஆளுங்கட்சிக்குள் இருந்துகொண்டு செய்கிறார்கள். தெரிந்தோ தெரியாமலோ எவராவது ஆட்சியைக் கவிழ்க்க முயற்சித்தால் பேரிழப்பு ஏற்படும். இவ்வாறான நிலையிலேயே விருப்பம் இல்லாத நிலையிலும் அமைச்சர்கள் இருவரை நீக்குவதற்கு ஜனாதிபதி தீர்மானம் எடுத்தார் என்றார்.
நாட்டில் எரிபொருள் பிரச்சினை இல்லை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ என்னிடம் கூறினார். இது தொடர்பில் நாட்டு மக்கள் பீதியடைய வேண்டாம் என நான் பொறுப்புடன் கூறுகிறேன். நாட்டு மக்களுக்கு நம்பிக்கையை வழங்காது, நம்பிக்கையை சீர்குலைத்தவர்கள் அரசாங்கத்தில் இருந்து வௌியேற்றப்பட்டுள்ளனர் என்றார்.