பொய் மூட்டை: உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்பது குறித்து ராகுல் காந்தி கருத்துக்கு மத்திய மந்திரி பதில்…!!
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டிய கடமை மத்திய அரசுக்கு ஏற்பட்டது. அப்போது, கணக்கீடும்போதுதான் ஆயிரக்கணக்கான மாணவர்கள் உக்ரைனில் சிக்கியுள்ளது தெரியவந்தது.
அவர்கள் ஆபரேசன் கங்கா திட்டம் மூலம் இந்தியா வரவழைக்கப்பட்டு வருகின்றனர். உக்ரைன் வான்வெளியை பயன்படுத்த விமானங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால், அண்டை நாடுகளுக்கு வரவழைக்கப்பட்டு மாணவர்கள் இந்தியா அழைத்து வரப்படுகிறார்கள். இதற்கிடையே முழு வீச்சாக மாணவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. அண்டை நாடுகளுக்கு மத்திய மந்திரி அனுப்பப்பட்டுள்ளனர்.
முதலில் டிக்கெட்டிற்கு அதிக அளவில் பணம் கேட்கப்படுவதாக குற்றச்சாட்டு வெளியானது. மேலும், தூதரகம் சரியான வகையில் பதில் அளிப்பதில்லை. கீவ் நகரில் இன்னும் மாணவர்கள் சிக்கித் தவிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
முதலில் இந்தியாவுக்கு புறப்பட விரும்பும் மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்ய வேண்டும் என வற்புறுத்தப்பட்டதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர். தென்இந்திய மாணவர்கள் என பாகுபாடு காட்டுவதாகவும் குற்றம்சாட்டினர். இது கடும் விமர்சனத்தை எழுப்பியது.
இந்த நிலையில்தான் ஆபரேசன் கங்கா திட்டம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்திருந்தார். உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்பது அரசின் வேலை. அதை சாதகம் அல்லது உதவி என எடுத்துக் கொள்ளக் கூடாது.
வெட்கக்கேடான முறையில் மாணவர்கள் நடத்தப்படுவது ஒட்டுமொத்த நாட்டையும் அவமதிக்கும் செயலாகும். அபரேசன் காங்கா திட்டத்தின் இந்த கசப்பான உண்மை மோடியின் உண்மையான முகத்தை காட்டுகிறது’’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள மத்திய மந்திரி நித்யானந்த் ராய் ‘‘ராகுல் காந்தியின் டுவிட்டரில் எந்த அர்த்தமும் இல்லை. அது ஒட்டுமொத்த பொய் மூட்டை. உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்பு கொண்டுவரும் வேலையில் மக்கள் பிரதமரை பாராட்டுகிறார்கள். மோடி நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இதனால்தான் தற்போது அனைவரும் இந்தியாவை பார்க்கிறார்கள்’’ என்றார்.
ஆபரேசன் கங்கா திட்டம் கடந்த பிப்ரவரி 22-ந்தேதி தொடங்கப்பட்டு மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டம்த்தின் மூலம் சுமார் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 11 விமானங்கள் மூலம் 2135 பேர் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர்.