“ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் பெரும் அரசியல் சதி வலை” !!
“இலங்கையில் 2019 ஏப்பிரலில் நடந்த ஈஸ்டர் தொடர் குண்டுத் தாக்குதல் பெரும் அரசியல் சதி வலைத் திட்டத்தின் ஒரு பகுதிதான்.”
-இவ்வாறு ஜெனிவா அமர்வில் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார் கொழும்புப் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை.
ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் பிரதான அரங்கில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:-
“2019 ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 14 நாடுகளைச் சேர்ந்த 47 வெளிநாட்டவர்கள், 52 குழந்தைகள் உட்பட 269 பேர் உயிரிழந்தனர். 500 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இந்தப் படுகொலைகள் சில இஸ்லாமிய தீவிரவாதிகளின் வேலையாகத்தான் இருக்கும் என்றே முதல் மனப்பதிவு ஏற்பட்டது. ஆனால், தொடர்ந்து நடைபெற்ற புலனாய்வுகள் இந்தப் படுகொலைகள் மிகப்பெரும் அரசியல் சதித்திட்டத்தின் ஒரு பகுதி என்பதைச் சுட்டி நிற்கின்றன.
நாங்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் – சிவில் அமைப்புக்கள் உண்மைகளைப் பின்பற்றிச் சென்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதிலும் – இலங்கையின் தற்போதைய அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கத் தவறிவிட்டது.
தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மைகளை வெளிக்கொணர்ந்து, அதற்குக் காரணமானவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்குப் பதிலாக நீதிக்காக குரல் எழுப்புபவர்களைத் துன்புறுத்தவும் அச்சுறுத்தவும் முயற்சிக்கப்படுகின்றது.
இதனால் இந்தக் கொடூரமான குற்றங்கள் நடந்து ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்குப் பின்னரும் அந்த ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றி நாம் இன்னும் அறியாமல் இருட்டில் இருக்கின்றோம்.
இது பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை கடுமையாக மீறும் விடயம் என்பதால், கடந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலினால் தொடங்கப்பட்ட சாட்சிய சேகரிப்பைத் தொடரவும், அதன்மூலம் ஈஸ்டர் ஞாயிறு படுகொலையின் உண்மைத்தன்மையை வெளிக்கொண்டு வருவதற்கான விசாரணை வழிமுறை ஒன்றை வகுக்கவும் ஆதரவு தருமாறு ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் மற்றும் அதன் அனைத்து உறுப்பு நாடுகளையும் நாங்கள் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்” – என்றார்.