டொலர் ஒன்று ரூ. 230 ஐ விட அதிகரிக்காது !!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியை 230 ஐ விட அதிகரிக்காமல் பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.
பாரதூரத்தன்மை மற்றும் புறத் தாக்கங்கள் மற்றும் உள்நாட்டு சந்தையில் அண்மைக் காலங்களில் ஏற்பட்டிருந்த நெருக்கடியான நிலை போன்றவற்றை கவனத்தில் கொண்டு இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை தெரிவித்துள்ளது. மேலும், தொடர்ந்தும் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் நிலவும் சந்தைப் போக்குகளையும், நிதிச் சந்தைசார்ந்த நடவடிக்கைகளையும் கண்காணித்து, பொருத்தமான திருத்தங்களை மேற்கொள்வதற்கு தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது. பணவீக்கத்தில் உறுதியான தன்மை, உள்நாட்டுத் துறை, நிதித் துறை மற்றும் பொருளாதாரச் செயற்பாடுகளில் உறுதித்தன்மையை எய்தும் நோக்கில் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகவும் நாணய சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உடனடியாக அமலுக்கு வரும் வகையில் நாணயப் பரிமாற்று சந்தையில் அதிகளவு நெகிழ்ச்சித்தன்மை அனுமதிக்கப்படும். அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி 230 ஐ விட அதிகரிக்காத வகையில் அந்நியச் செலாவணி கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறும் எனவும் இலங்கை மத்திய வங்கி எதிர்பார்க்கின்றது.
கறுப்பு சந்தையில் அமெரிக்க டொலரின் பெறுமதி ரூ 240 முதல் 250 வரையில் காணப்பட்டதுடன், இலங்கை மத்திய வங்கியினால் இவ்வாறான கறுப்பு சந்தை கொடுக்கல் வாங்கல்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரையில் இலங்கை ரூபாயின் மதிப்பை கட்டுப்படுத்திப் பேணாமல், அதனை மிதக்க விடுவதனூடாக உறுதியான நிலையை எய்தக்கூடியதாக இருக்கும் என குறிப்பிட்டிருந்தது.