’மனித உரிமைகளை மதிக்கும் அரசாங்கம்’ !!
தற்போதைய அரசாங்கம், அடிப்படை மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் அரசாங்கம் எனவும் அது தொடர்பில் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான டலஸ் அழகப்பெரும, மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 45 நாடுகளில் 31 நாடுகள், மனித உரிமைகளை பாதுகாப்பதில் இலங்கை எடுத்துள்ள சாதகமான விடயங்களை பாராட்டியுள்ளமை மூலம் அது உறுதியாகியுள்ளது என்றார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (08) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பெரும் அரசியல் சதி திட்டத்தின் ஒரு பகுதியென, பேராயர் கர்தினால் ரஞ்சித் மெல்கம் ஆண்டகை, ஜெனீவா அமர்வில் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், இலங்கையில் 14,000 பேர் காணாமல் போயுள்ளனர். இவர்கள் எந்த இனமாக இருந்தாலும் அவர்கள் இலங்கையர்களே என குறிப்பிட்டார்.
இவ்வாறு காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் கூட எந்தவொரு அரசாங்கத்தாலும் முன்னெடுக்கப்பட்டிருக்க வில்லை. ஆனால் இன்று முதற்தடவையாக இதற்கு உரிய பதிலை வழங்கி, அதற்கான பொறிமுறையைக் உருவாக்கி அதனை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
எனவே மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிப்பவர்கள் இது தொடர்பிலும் மதிப்பீடு செய்ய வேண்டும் என்றார்.
எனவே, நாங்கள் இருண்ட வெளிச்சத்தில் ஐநா மனித உரிமைகள் பேரவையை பார்க்கக் விரும்பாமல் சாதகமான முறையில் அதனைப் பார்ப்பதாகவும் இதனை ஐ.நா மனித உரிமைகள் பேரவை உறுப்பினர்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.