கொரோனா 4வது அலை இந்தியாவில் வராது- பிரபல நிபுணர் திட்டவட்டம்…!!
இந்தியா தற்போது ஒமைக்ரான் வைரசால் தூண்டப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாம் அலையின் இறுதிக்கட்டத்தில் உள்ளது.
இந்த தருணத்தில், நான்காம் அலை வருகிற ஜூன் மாதம் 22-ந்தேதி தொடங்கி அக்டோபர் 24-ந்தேதி வரை நீடிக்கும் என்றும், புதிய கொரோனா வகைகளின் வெளிப்படுதல் மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி உள்பட மக்களின் தடுப்பூசி நிலவரம் ஆகியவற்றுக்கு ஏற்பவே இந்த அலையின் தீவிரம் அமையும் என்றும், ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை உச்சம் அடையும் என்றும் கான்பூர் ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் அதிர்ச்சித்தகவல்களை வெளியிட்டனர்.
இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 4-ம் அலை வராது என்று அடித்துச்சொல்கிறார் பிரபல நச்சுயிரியல் நிபுணர் டாக்டர் டி.ஜேக்கப்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் மேம்பட்ட நச்சுயிரியல் ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குனரான டாக்டர் டி.ஜேக்கப் ஜான் இதுபற்றி மேலும் கூறியதாவது:-
நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலை முடிவுக்கு வந்து விட்டது. நாடு மீண்டும் ‘என்டெமிக்’ (உள்ளூர் தொற்று) நிலைக்குள் நுழைந்துள்ளது என்று நம்பலாம். இந்த நிலை குறைந்தது 4 வாரங்களுக்கு இருக்கும் என்பது எதிர்பார்ப்பு. எனவே நாம் இன்னும் 4 வாரங்கள் உள்ளூர் தொற்று நிலையில் இருப்போம். இதுதான் இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் காட்டும்போக்கு ஆகும். இதுதான் எனது நம்பிக்கையும் ஆகும்.
வித்தியாசமாக செயல்படும், எதிர்பாராத மாறுபாடு வராத வரையில், கொரோனா வைரஸ் தொற்றின் 4-வது அலை ஏற்படாது.
இந்தியாவில் கிடைக்கிற அனைத்து தகவல்களையும், தொற்று நோயியல் மற்றும் வைரஸ் மாறுபாடுகள் மற்றும் உலகளாவிய போக்கு ஆகியவற்றை எடுத்துக்கொண்டால், புத்திசாலித்தனமான கணித மாதிரிகள் இருந்தாலும் கூட, 4-ம் அலை ஏற்படாது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்த மாதிரி முறை, இந்த சூழ்நிலையில் செல்லுபடியாகாது.
கடந்த காலத்தில் சுவாசக்குழாயில் பரவும் நோய்கள் அனைத்தும் இன்புளூவன்சாவால் ஏற்பட்டது. ஒவ்வொரு இன்புளூவன்சாவும் 2 அல்லது 3 அலைகளுக்குப்பிறகு முடிவு அடைந்தன.
கொரோனா வைரஸ் தொற்று பிறழ்வுகள் வந்து கொண்டே இருக்கும். மேலும் சில பிறழ்வுகள் ஆன்டிஜெனிக் சறுக்கலை ஏற்படுத்தும். அத்தகைய வைரஸ்கள் சிறிய அளவிலான பாதிப்புகளையே ஏற்படுத்தக்கூடும்.
எனவே நோய் கண்காணிப்பு மற்றும் வைரஸ்களின் மாதிரியின் மரபணு வரிசை முறை பரிசோதனை தொடர வேண்டும். இதனால் ஒரு பிறழ்ந்த மாறுபாட்டால் நாம் ஆச்சரியப்படமாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.